நடிகை பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டது ஏன்?

திருவனந்தபுரம்:

நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏன் கைது செய்யப்பட்டார் தெரியுமா? நடிகை பாவனா, கடந்த பிப்ரவரி 17ம் தேதி காரில் வந்துகொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவரை கடத்தியது.

காரில் வைத்து பாவனா அந்த கும்பலால் மானபங்கப்படுத்தப்பட்டார். இது குறித்து பாவனா, காவல்துறையில் புகார் கொடுத்தார். விசாரணை நடந்தது. பல்சர் சுனி என்பவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலைியல் திடீர் திருப்பமாக, பல்சர் சுனியின் கூட்டாளி, தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக பிரபல மலையாள நடிகர் திலீப், காவல்துறையில் புகார் செய்தார். இதையடுத்து, திலீப்பிடமும், அவருடைய மேனேஜர் அப்புண்ணி, சினிமா இயக்குனர் நாதிர் ஷா ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்

இந்த நிலையில், பல்சர் சுனி வாக்குமூலம் அளித்தார். அதில், “பாவனாவை பாலியல் தொல்லை செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை, நடிகை காவ்யா மாதவன் நடத்தும் கடையில் கொடுத்தேன்” என்று தெரிவித்தார். திலீப்பின் மனைவிதான் காவ்யா மாதவன். காவ்யா மாதவன் கடையில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

தவிர, பல்சர் சுனி, பாவனாவை கடத்துவதற்கு முன்பு, அடிக்கடி தொடர்பு கொண்ட தொலைபேசி எண்களை காவல்துறையினர் கண்டறிந்தனர். அந்த எண்கள், திலீப்புக்கு வேண்டியவர்களின் எண் என்பது தெரியவந்தது. தவிர, சிறையில் இருந்த பல்சர் சுனி, திலீப்பின் மேனேஜருடன் பலமுறை பேசியதும் தெரியவந்தது.

நடிகர் திலீப்புடன் பல்சர் சுனி நிற்பது போன்ற புகைப்படங்களும் காவல்துறையினர் வசம் கிடைத்தன. இதையடுத்து போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், பாவனா வழக்கில், தொடர்புடைய நபர்களை கைது செய்வது என்று முடிவு செய்தார்கள்.

அப்போதே நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவன் ஆகியோர் எந்த நேரமும் கைதாவார்கள் என்று தகவல் பரவியது. இந்த நிலையில்தான் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார்.


English Summary
why actor dileep arrested in actress bhavana abducted case