புது டெல்லி தொகுதியில் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா, டெல்லி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிய மூத்த பாஜக தலைவரான விஜேந்தர் குப்தா, முன்பு மாநிலத் தலைவராகப் பணியாற்றிய முக்கிய பிராமண முகமான சதீஷ் உபாத்யாய், மத்தியத் தலைவர்களுடன் நெருங்கிய உறவைக் கொண்ட டெல்லி பாஜகவின் பொதுச் செயலாளர் ஆஷிஷ் சூட் மற்றும் வைஷ்ய சமூகத்தைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ். ஆதரவுபெற்ற ஜிதேந்திர மகாஜன் ஆகியோர் டெல்லி முதல்வர் போட்டியில் உள்ளனர்.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு ஒருவாரம் ஆகும் நிலையில் இதுவரை முதல்வர் தேர்வு இறுதி செய்யப்படவில்லை.
பாஜக-வின் 48 எம்எல்ஏக்களில் 15 பேரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டு, அவர்களிடமிருந்து முதல்வர், அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவிகளுக்கு ஒன்பது பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலை அணுகிய பாஜக, சட்டமன்ற கட்சித் தலைவரை முடிவு செய்ய உயர்மட்டக் கூட்டங்களைத் தொடங்கியுள்ளது, ஐந்து தலைவர்கள் முக்கிய போட்டியாளர்களாக உருவெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுதில்லி திரும்பிய பிறகு டெல்லியில் அரசு அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைய வாய்ப்புள்ளது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பிற பாஜக உயர்மட்டத் தலைவர்கள் இடையே இந்த விவகாரம் குறித்து விவாதிக்க கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியின் புதிய முதல்வரின் பதவியேற்பு விழா பிப்ரவரி 19 அல்லது 20 ஆம் தேதி நடைபெறும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்டமன்றக் கட்சிக் கூட்டம் பிப்ரவரி 17 அல்லது 18 ஆம் தேதி நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.