டெல்லி: நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ள நிலையில், இந்தியாவில் முதன்முதலாக தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் மற்றும் தமிழகத்திலும் முதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் தடுப்பூசி போடுவதற்கான நிகழ்வை தொடங்கி வைத்ததும், தலைநகர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், சுகாதார தொழிலாளி மணீஷ் குமார் என்பவருக்கு முதல்  கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன்  உள்பட அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டனர், அவர்கள் முன்னிலையில் சுகாதார தொழிலாளி மணீஷ் குமார்  முதன் முதலாக தடுப்பூசிப் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.  தொடர்ச்சியாக கொரோனா தடுப்பு ஊசிகள் செலுத்தும பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்ததும், அரசு மருத்துவர் செந்தில் என்பவருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது. அதைத் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகள் தமிழகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்வில் துணைமுதல்வர் ஓபிஎஸ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட அமைச்சர்கள், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டனர்.

நாடு முழுவதும் இன்று, மூன்று இலட்சத்துக்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு இன்று தடுப்பு ஊசிகள் போடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.