இந்த 2021ம் புத்தாண்டில், இப்போதைய நிலைவரை ஒரு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கலந்த விஷயம் என்னவென்றால், துக்ளக் விழாவில், “திமுகவை எதிர்க்க வேண்டுமானால், சசிகலா போன்றவர்களையும் அதிமுகவில் இணைத்துக்கொள்ள வேண்டும்” என்று ஆடிட்டர் குருமூர்த்தி பேசிய பேச்சுதான்! அதேசமயம், தனது வன்மத்தை மறைக்காத வண்ணம், சசிகலாவை இழிவுபடுத்தும் வகையிலும் பேசியுள்ளார்.

இந்த குருமூர்த்திதான், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னதாக, டெல்லி பாஜக அரசால், சசிகலா குடும்பம் விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்டதற்கு காரணமாக இருந்தவர் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்.

இவரது ‘ஆபரேஷன் சசிகலா’ ஒருவகையில் வெற்றி என்றாலும், மற்றொரு வகையில் பெரிய தோல்விதான்! அதன்பிறகு, இவர் மேற்கொண்ட ‘ஆபரேஷன் தினகரன்’ நடவடிக்கையும் பாதி வெற்றி & பாதி தோல்வி.

‘ஆபரேஷன் சசிகலா’ மற்றும் ‘ஆபரேஷன் தினகரன்’ போன்றவற்றை, வலிமையான மத்திய ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும்போது செய்வதென்பதற்கு பெரிய திறமையெல்லாம் தேவையில்லைதான்! ஆனாலும், அவற்றில் முழு வெற்றியடையவில்லை குருமூர்த்தி.

இதற்கடுத்து, அவர் மேற்கொண்ட பெரிய நடவடிக்கை என்னவென்றால் ‘ஆபரேஷன் ரஜினி’. ஆனால், இதில் முற்றிலும் படுதோல்வியை அடைந்தார் குருமூர்த்தி. இதனால், இவரின் பேச்சை அதிகளவில் நம்பி வந்த பாஜகவுக்கும் இவர்மீது வருத்தம்தான்.

தன்னை ஒரு மாபெரும் அறிவுஜீவியாக முன்னிறுத்திக் கொள்வதில் எப்போதும் அலாதி பிரியம் கொண்ட குருமூர்த்தி, தனக்கு கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் வழுக்கி விழுந்தார்.

அதிமுகவை விழுங்கி, பாஜகவை முன்னிறுத்தலாம் என்ற பாஜகவின் திட்டத்திற்கு மாபெரும் ஆலோசகராக தன்னை முன்னிறுத்திக் கொண்டவர், இப்போது, திமுகவின் வெற்றியை தடுத்தால் போதும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளார். இதிலும், இவர் வெல்வதற்கான வாய்ப்புகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இல்லைதான்!

வேறு வழியின்றி, இப்போது, திமுகவை வீழ்த்த வேண்டுமானால் அதிமுகவை வலிமைப்படுத்த வேண்டுமென்ற அதரப் பழசான அரசியல் கோட்பாட்டில் வந்து நிற்கிறார் குருமூர்த்தி.

4 ஆண்டுகளுக்கு முன்னதாக, எந்த சசிகலாவை அரசியல் களத்திலிருந்து ஒழித்துவிட வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு நின்றாரோ, இப்போது அதே சசிகலாவுக்காக அதிமுகவின் கதவைத் தட்டுகிறார்!

சசிகலாவின் முன்னால் ஒருகாலத்தில் கைகட்டி நின்று, அவரின் காலில் விழுந்த குழுவினரில் ஒரு பகுதியினர், சசிகலா செய்த உதவியால், இன்று அதிமுகவில் ஆட்சி அதிகாரத்துடன் கோலோச்சுகின்றனர். அவர்கள், தேர்தலில் பாதிப்பு வரும் என்று தெரிந்தும் சசிகலாவை ஏற்பதில் முரண்டுபிடித்து வருகின்றனர்.

ஆனாலும், குருமூர்த்தி தன் பாணியில் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார். சசிகலாவில் தொடங்கிய தன் ஆட்டத்தை, ஒரு சுற்றிசுற்றி வந்து, அந்த சசிகலாவிலேயே மீண்டும் நிறுத்தியுள்ளார்! தனது தோல்வியை மறந்து, சற்று ஆறுதல் தேடிக்கொள்வதற்காக சசிகலாவை வேறுவகையில் தாக்கியிருந்தாலும், கடைசியில் அவரிடமே சரணடைந்துவிட்டுள்ளார்.

உலகம் உருண்டைதான் என்பதை குருமூர்த்தியும் தன் பங்கிற்கு நிரூபித்துள்ளார்..!

– மதுரை மாயாண்டி