டெல்லி:

நிர்பயா குற்றவாளிகளை எப்போது தூக்கிலிடப்போகிறிர்கள், அதற்கான தேதியை உடனே அறிவியுங்கள் என்று  நீதிமன்றத்தில் நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி கண்ணீர் மர்க வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவமாணவி நிர்பயா ஒரு கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, தூக்கி வீசப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இந்த மாபாதகத்தை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், நமது சட்டத்தில் உள்ள  ஓட்டைகள் மூலம்  வழக்கறிஞர்களின் ஆலோசனையின் பேரில் குற்றவாளிகள் புதுப்புது வகையான மனுக்களை தாக்கல் செய்து, தூக்கு தண்டனையில் இருந்து தப்பித்து வருகின்றனர்.

நிர்பயா தாயார் ஆஷாதேவி

ஏற்கனவே பல்வேறு கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து,  குற்றவாளிகள் நான்கு பேரும்  ஜனவரி 22ம் தேதி தூக்கில் போடும்படி டெல்லி நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்தது. அதையடுத்து, குற்றவாளிகளை தூக்கில் போடுவதற்கான பணிகளை திகார் சிறை நிர்வாகம் முடுக்கி விட்ட நிலையில், குற்றவாளியின் மனு காரணமாக தூக்கு தண்டனை தேதி மாற்றி, பிப்ரவரி 1-ந்தேதி காலை 6 மணிக்கு தூக்கில் போட வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து குற்றவாளிகள் புதுப்புது மனுக்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில், இன்றுவரை அவர்களின் தூண்டு தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

இதற்கிடையில்,  குற்றவாளிகள் நால்வரையும் தனித்தனியாக தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் அனுமதி மறுத்ததை எதிர்த்தும், தூக்குத் தண்டனையை நிறைவேற்ற தடை விதித்ததை ரத்து செய்யக்கோரியும், மத்திய, மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்திருந்தன.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய   நீதிபதி பானுமதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, நான்கு குற்றவாளிகளையும் தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை விசாரணை நீதிமன்றத்தை அணுகி டெல்லி திகார் சிறை நிர்வாகம் பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, இது தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் நடைபெற்றது. வாதங்களை தொடர்ந்து கொண்டிருந்த போது,  குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் நிர்பயா தாயார் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார். குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தர  7 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறேன் என்று கண்ணீர் விட்டவர், விரைவில் தூக்கிலிடும் தேதியை அறிவியுங்கள் என அவர் கோரிக்கை வைத்தார்.