சென்னை

பார்கள் நடத்த சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மது விற்பனைக்கு எவ்வாறு தடை விதிக்க கோரலாம் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினா எழுப்பி உள்ளனர்.

கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த ஆர்.பூமிராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். தனது வழக்கில் அவர் ”அனைத்து டாஸ்மாக் பார்களிலும் காவல்துறை மற்றும் கலால் துறை அதிகாரிகள் உதவியுடன் 24 மணி நேரமும் தடையின்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் இந்த பார்களில் தரமற்ற மதுபானங்கள் விற்கப்படுவதால், டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூலமாக விற்கப்படும் மதுபான வகைகள் உண்மையிலேயே தரமானவையா, அதில் எத்தனை சதவீதம் ஆல்கஹால் உள்ளது. அவை குடிப்பதற்கு உகந்ததா என்று தெரியவில்லை.  எனவே மதுபானங்களின் தரத்தை உறுதி செய்யும் வகையில் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கிடங்குகள் மற்றும் டாஸ்மாக் விற்பனை மையங்களில் திடீர் சோதனை மேற்கொள்ள அரசு தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், டிஜிபி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.

தவிர டாஸ்மாக் மதுபானங்களின் தரத்தைச் சோதித்து உறுதிப்படுத்தும் வரை தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுபானங்களை விற்கத் தடை விதிக்க வேண்டும். டாஸ்மாக் மதுபானங்களை அருகில் உள்ள பார்களில் விற்கவும் தடை விதிக்க வேண்டும்.” எனக் கோரிக்கை விடுத்துள்ளார் .

நேற்று இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் புகழேந்தி, லட்சுமி நாராயணன் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், மதுவிலக்கு சட்டத்தில் பார்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், மதுவிற்பனைக்குத் தடை கோரி எப்படி வழக்கு தொடர முடியும்? என கேள்வி எழுப்பினர்  இது குறித்து, மக்கள் பிரதிநிதிகளிடம்தான் முறையிட முடியும் எனத் தெரிவித்த நீதிபதிகள், அடுத்தகட்ட விசார ணையை ஜூன் மாதத்துக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.