உக்ரைன் மீது தாக்குதல் நடத்த இரண்டு மாதங்களாக ரஷ்ய ராணுவம் அதன் எல்லையில் தயார் நிலையில் காத்திருந்தது.

ரஷ்ய படையினரின் ஒரு பிரிவு தங்கள் நிலைகளுக்கு திரும்புகிறது என்று ரஷ்யா கூறுவதை ஏற்க வேண்டாம் என்று அமெரிக்கா எச்சரித்தது.

அந்த நிலையில், பிப்ரவரி 15 ம் தேதி உக்ரைனில் உள்ள இந்தியர்கள் குறிப்பாக மாணவர்கள் இங்கு தங்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுபவர்கள் பதற்றமான சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக இந்தியா செல்லலாம்.

அவ்வாறு இந்தியா செல்ல நினைப்பவர்கள் தூதரகத்தை தொடர்பு கொண்டு தங்கள் இருப்பை பதிவு செய்ய வேண்டும் என்று ஓர் அறிக்கை வெளியிட்டது.

இந்த அறிக்கை வெளியிட்ட மூன்றாவது நாள் பிப் 18 ம் தேதி உக்ரைனை விட்டு வெளியேற விரும்பும் மாணவர்களின் தேவைக்காக 20, 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மூன்று விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்கும் என்று தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து 24 ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க ஆரம்பித்ததை அடுத்து விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் அந்த மூன்றாவது விமானம் இயக்க முடியாமல் போனது.

போர் துவங்கிய நிலையில் சிறப்பு விமானம் இயக்க முடியவில்லை என்ற அறிவிப்பை வெளியிட்ட இந்திய தூதரகம் உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற மாற்று ஏற்பாடுகளைச் செய்யும் என்று அதில் உறுதியளித்திருந்தது.

ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் அங்கு சிக்கித் தவிக்கும் நிலையில் முதல் அறிவிப்பு 15ம் தேதி, வெளியான பின் உக்ரைனை விட்டு வெளியேற எத்தனை மாணவர்கள் இந்திய தூதரகத்தில் விருப்பம் தெரிவித்திருந்தார்கள் என்றும்

20,000 மாணவர்களில் மூன்று விமானங்களில் செல்லுமளவிற்கு வெறும் 700 பேர் மட்டுமே பயணம் செய்ய விருப்பம் தெரிவித்தார்களா என்றும் தெரியவில்லை என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், 15 ம் தேதியே விருப்பம் பெறப்பட்டு விமானம் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் இந்த சிறப்பு விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதாலும் குறைந்த அளவு விமானங்களே இயக்கப்பட்டதாலும் சொற்ப அளவு மாணவர்களே வெளியேற முடிந்தது.

மாணவர்கள் விருப்பத்திற்கு இணங்க அந்த ஒரு வார கால இடைவெளியில் (பிப் 15 – பிப் 22) வழக்கமான கட்டணத்தில் கூடுதல் விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஆன்லைன் வகுப்பு குறித்து கல்வி நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவித்த இந்திய தூதரகம் போர் துவங்குவதற்கு முன் பதட்டமான சூழல் நிலவும் போது உக்ரைன் நாட்டு கல்வித்துறையுடன் மேற்கொண்ட முயற்சி என்ன என்பது குறித்தும் விளக்கமில்லை.

தவிர, போர் நடைபெறக்கூடும் என்ற நிச்சயமற்ற சூழலில் இந்தியா திரும்ப வசதியாக மாணவர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை மாணவர்களிடம் பல்கலைக்கழங்கள் ஒப்படைத்ததா என்பதும் சந்தேகத்திற்கு இடமான வகையில் உள்ளது.

24ம் தேதிக்குப் பின் உக்ரைன் நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள பல்கலைக்கழங்களில் படித்து வரும் மாணவர்களை குறிப்பாக உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷ்ய எல்லையை ஒட்டி உள்ள கார்கிவ் நகரில் இருந்து மேற்கு எல்லைக்கு மாணவர்களை அழைத்துவர எடுக்கப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கை என்ன என்பது குறித்தும் தெரியவில்லை.

மேலும், பல்வேறு நகரங்களில் இருந்து போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாகியா, ருமேனியா ஆகிய நாடுகளின் எல்லைக்கு அருகில் காத்திருக்கும் மாணவர்களை கூட தூதரக அதிகாரிகளால் மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து மீட்புப் பணியை துரிதப்படுத்த மத்திய அமைச்சர்கள் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்திய தூதரகத்தின் உளவு அமைப்பு போர் சூழல் குறித்தும் பல்வேறு நகரங்களில் உள்ள மாணவர்களின் போக்குவரத்து குறித்தும் பெரிதும் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை.

மாறாக மாணவர்கள் அஜாக்கிரதையாக இருந்ததாக இங்குள்ள இடைத்தரகர்களும், பா.ஜ.க. ஆதரவாளர்களும் மாணவர்களின் நலனில் அக்கறையில்லாமல் சமூகஊடங்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.