பெங்களூரு: கர்நாடக முதல்வராக பாரதீய ஜனதா தலைவர் எடியூரப்பா இன்று மாலையில் பதவியேற்கவுள்ள நிலையில், அவர் ஆளுநர் வாஜுபாய் வாலாவுக்கு ஆட்சியமைக்க உரிமைக்கோரி எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, “தற்போதைய குமாரசாமி தலைமையிலான அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும்வரை, அவரை பதவியில் நீடிக்கும்படி நீங்கள் உத்தரவிட்டீர்கள்.

நான் தற்போதைய நிலையில், பாரதீய ஜனதாவின் சட்டமன்ற கட்சித் தலைவராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ளேன். எங்கள் கட்சி 105 உறுப்பினர்களுடன் சட்டசபையில் தனிப்பெரும் கட்சியாக உள்ளது.

ஆகையால், என்னை இன்றே மாற்று அரசை அமைக்க அழைப்பு விடுக்கும்படி உங்களை கேட்டுக் கொள்கிறேன். இன்று மாலை 6 மணிமுதல் 6.15 மணிக்குள்ளாக நான் முதல்வராக பதவியேற்பேன். எனவே, பதவியேற்புக்கு தேவையான அனைத்து ‍ஏற்பாடுகளையும் செய்யுமாறு நீங்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் எடியூரப்பா.