உலகின் முக்கிய நாய் கண்காட்சிகளில் ஒன்றாகக் கருதப்படுவது வெஸ்ட்மின்ஸ்டர் நாய் கண்காட்சி.

வெஸ்ட்மின்ஸ்டர் கென்னல் கிளப் சார்பாக நியூயார்க் நகரில் நடைபெறும் இந்த கண்காட்சியில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்வேறு வகையான நாய்கள் இடம்பெற்றுள்ளது.

நாய்களும் அவற்றின் கையாளுபவர்களும் அதன் தன்மைக்கு ஏற்ப ஏழு குழுக்களாகப் போட்டியிடுகின்றனர் – விளையாட்டு, வேலை, டெரியர், வேட்டை நாய், பொம்மை, விளையாட்டு அல்லாத மற்றும் மேய்த்தல் ஆகிய திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக இந்த கண்காட்சி இருக்கும்.

ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் ஒவ்வொரு நாயும் தனித்தனியாக தனது திறமையை வெளிப்படுத்தும் இந்த நிகழ்ச்சி காண்பவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

உலகப் புகழ்பெற்ற இந்த நாய் கண்காட்சியில் தங்கள் நாயுடன் கலந்து கொள்வதையே கௌரவமாக நினைக்கும் நிலையில் இந்த போட்டியின் நடுவர்களாக இருந்து சிறந்த நாய்களை தேர்வு செய்வதென்பது அதைவிட கௌரவமாக கருதுபவர்களும் உண்டு.

அந்த வகையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நாய்களுடன் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டுவரும் நியூயார்க் நகரைச் சேர்ந்த டெட் யூபங்க் இந்த ஆண்டின் நடுவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

தனது நாயுடன் இந்த ஆண்டு போட்டியில் கலந்து கொள்ள காத்திருந்த டெட் யூபங்க்-கிற்கு வெஸ்ட்மின்ஸ்டர் கென்னல் கிளப் சார்பாக நடுவராக செயல்பட வந்த அழைப்பு அவரை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்துள்ளது.

டெட் யூபங்க் தவிர, மைக்கேல் பாஃல்க்னர், ஷரோன் ரெட்மர் ஆகியோருக்கும் நடுவராக செயல்பட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

2500க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்கும் இந்த போட்டி உலகின் இரண்டாவது பழமையான நாய்கள் கண்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர, பிற கண்காட்சிகளில் வென்ற நாய்கள் மட்டுமே இந்தப் போட்டியில் கலந்து கொள்ள முடியும் என்றாலும் பல கட்டங்களாக நடைபெற்ற தகுதிச் சுற்றில் வெற்றிபெற்ற நாய்கள் மட்டுமே இன்று நடைபெறும் இறுதிச் சுற்றில் தங்கள் திறமையை வெளிப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.