இந்தியாவின் புதிய சாதனை :: மக்கள் தொகையில் உலகில் முதலிடம்
இந்தியா மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி  முதலிடத்தைப் பிடித்துள்ளது. அண்மையில் ஐ.நா. மக்கள்தொகை நிதியத்தின் (யுஎன்எஃப்பிஏ) உலக மக்கள்தொகை அறிக்கை 2023  வெளியானது. அந்த  அறிக்கையில் உலக மக்கள் தொகையில் இந்தியா 142.86 கோடி மக்கள்தொகையுடன் முதலிடத்திலும், சீனா 142.57 கோடி மக்கள்தொகையுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது தெரிய வந்துள்ளது.  சீனா கடந்த  200 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் தொகையில் முதலிடத்திலிருந்து வந்தது.   மொத்தமுள்ள இந்திய மக்கள் தொகையில் 14 வயது வரை 25 சதவீதம் பேரும், 15 முதல் 64 வயது வரை 68 சதவீதம் பேரும், 65 வயதுக்கு  மேற்பட்டவர்கள் 7 சதவீதம் பேரும் இருப்பதும் தெரியவந்துள்ளது.
உலக அளவில் உத்தரப்பிரதேசத்தின் மக்கள்தொகையையே கொண்ட பாகிஸ்தானும் (சுமார் 23.14 கோடி), தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் தோராயமாக மூன்றில் ஒரு பங்கையே கொண்ட இலங்கையும் (2.2 கோடி) பொருளாதார ரீதியாக மிகப் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன.  கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு, உக்ரைன் -ரஷியா இடையேயான போர் போன்றவற்றின் காரணமாக, தமிழ்நாட்டின்  அளவுக்குக் கூட மக்கள்தொகை இல்லாத பல நாடுகள் பொருளாதாரரீதியாக கடும் சவாலை எதிர்கொண்டு திண்டாடிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், கொரோனாவுக்கு  தடுப்பூசி கண்டுபிடித்து  உலக நாடுகளுக்குக் கொடுத்ததுடன் 80 கோடிக்கும் அதிகமானோருக்கு  25 மாதங்களுக்கும் மேலாக 5 கிலோ உணவு தானியத்தை மத்திய அரசு இலவசமாகக் கொடுத்துள்ளது.    இந்தியாவில் கடந்த 2020- 21 ஆம்   ஆண்டில் சாதனை அளவாக 109.59 மில்லியன் டன் கோதுமை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.அது  2021-22 இல் வெப்ப அலை போன்றவற்றால் 106.84 மில்லியன் டன்னாக  குறைந்தது. இந்தியா பால் உற்பத்தியில்  முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு 183.96 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. (அமெரிக்காவை விட 50 சதவீதம் அதிகம். சீனாவைவிட 3 மடங்கு அதிகம்).  இதனால் இந்தியாவில் ரூ.2,928 கோடி மதிப்பிலான 1.08 லட்சம் டன் பால் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இதைப்போல் இந்தியா பல துறைகளிலும்  சாதனை படைத்து வரும் நிலையில், இப்போது மக்கள்தொகை பெருக்கத்திலும் சாதனை படைத்துள்ளது.