கொல்கத்தா

மூன்று முறை மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் பதவியும் ஏழு முறை எம் எல் ஏ பதவியும் வகித்த சோமன் மித்ரா மரணம் அடைந்துள்ளார்.

மேற்கு வங்க மூத்த காங்கிரஸ் தலைவர்களில் சோமன் மித்ரா குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவர். இவர் கடந்த 1960 மற்றும் 70களில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார். அவர் மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக 1992-96, 96-98 மற்றும் 2018 ஆகிய வருடங்களில் மூன்று முறை பதவி வகித்துள்ளார்.

அத்துடன் மேற்கு வங்க சட்டப்பேரவை உறுப்பினராக ஏழு முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   அவர் கடந்த 2008 ஆம் வருடம் காங்கிரஸில் இருந்து விலகி முன்னேற்ற இந்திரா காங்கிரஸ் என்னும் கட்சியை தொடங்கினார்.  அதன்பிறகு தனது கட்சியை திருணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைத்து 2009 ஆம் வருடத் தேர்தலில் திருணாமுல் சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்றர்.

அவர் மக்களவை உறுப்பினராக இருந்த போது அவருக்கு இதயத்தில் பை பாஸ் அறுவை சிகிச்சை நடந்தது.  கடந்த 2014 ஆம் ஆண்டு அவர் திருணாமுல் கட்சியில் இருந்து  விலகி  மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.  தற்போது 78 வயதாகும் மித்ரா வயது மூப்பு காரணமாக நோய் வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்  இன்று அதிகாலை சுமார் 1.30 மணிக்கு அவர் மாரடைப்பால் உயிர் இழந்தார்.

மித்ராவுக்கு மனைவியும் மகனும் உள்ளனர்.