பெங்களூரு: அரசு மருத்துவமனைகளில் 18வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி இலவசமாக போடப்படும் என கர்நாடக முதல்வர்  எடியூரப்பா அறிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்துள்ளது.  தொற்று பரவலை கட்டுப்படுத்த மே 1-ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அத்துடன், மாநிலங்கள், தனியார் மருத்துவனைகள் கொரோனா தடுப்பூசிகளை மருந்து தயாரிக்கும் தனியார் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்துகொள்ளவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கிடையில்,  தடுப்பூசிகளின் விலையை தயாரிப்பு நிறுவனங்கள்  பல மடங்கு உயர்த்தியுள்ளன. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி மாநில அரசுக்கு ஒரு டோஸ் 600 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைக்கு 1200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என  நிறுவனம் அறிவித்துள்ளது. அதுபோல,  சீரம் நிறுவனத்தின் , கோவிஷீல்டு தடுப்பூசி மாநில அரசுக்கு ஒரு டோஸ் 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைக்கு 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகம், டெல்லி, ராஜஸ்தான் உள்பட சில மாநிலங்களில் 18வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அறிவித்துள்ளன. அதைத்தொடர்ந்து, தற்போது கர்நாடக மாநில அரசும், இலவசமாக தடுப்பூசி போடப்படும் என தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடியூரப்பா, மாநிலத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து விவரித்த நிலையில், 18வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போடப்படும் என தெரிவித்துள்ளார்.