சென்னை; உயர்நீதிமன்றம் உத்தரவால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை முன்னாள் ஓபிஎஸ் ஆதரவாளரும், இந்நாள்  இபிஎஸ் ஆதரவாளருமான  கேபி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இபிஎஸ் கூட்டிய பொதுக்குழு செல்லாது என அறிவித்துள்ளதுடன்,  அதிமுகவில் ஜூன் 23-ஆம் தேதி பொதுக்குழு கூடுவதற்கு முன்பு  இருந்த நிலையே நீடிக்கும் என்றும்  அதிரடியாக னி நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பளித்தார். எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என்றும் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் -ஐ நீக்கியது செல்லாது எனவும் உத்தரவிட்டார்.

உயர் நீதிமன்றம் தீர்ப்பு எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஈபிஎஸ் சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில்  கட்சியின் மூத்த தலைவர்கள், வழக்கறிஞர்களுடன்  ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அ

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த  கேபி முனுசாமி , சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பின் விவரம் முழுமையாக கிடைக்க பெறவில்லை. தீர்ப்பின் விவரம் முழுமையாக கிடைத்தபின் தலைமை கழகம் மூலம் பதிலளிக்கிறோம். பொதுக்குழுவில் கொண்டுவந்த தீர்மானங்களை உறுப்பினர்கள் முழு மனதாக ஏற்றுக்கொண்டனர். முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா நடத்திய பொதுக்குழுவை போலவே பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.

தற்போது உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டுள்ளனர். பொதுக்குழு உறுப்பினர்கள் தான் அனைத்து அதிகாரம் படைத்தவர்களாக இருக்கிறார்கள் .

இவ்வாறு அவர் கூறினார்.