பொது நல வழக்கில் தவறான தகவல்கள் அளித்தால் அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம்

Must read

மதுரை: பொது நல வழக்கில் தவறான தகவல்கள் தெரிவித்தால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுநல வழக்குகள் என்றால் சட்ட அலுவலகத்தின் வக்கீல்கள் சமூக சேவையில் ஈடுபடும் மற்றும் மக்கள் மற்றும் நாட்டு நலனுக்காக பணியாற்றும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சட்ட ஆலோசனை மற்றும் சட்டப்படியான சலுகைகளை பெற தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால், சமீப காலமாக பொதுநல வழக்குகள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் வின்சென்ட் என்பவர்  உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு  தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், ‘மானாமதுரையில் அரசு புறம்போக்கு இடத்தை தனி நபர்கள் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்து பட்டா பெற்றுள்ளனர். இந்த பட்டாக்களை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் இதே கோரிக்கையுடன் ஏற்கெனவே மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிமன்றம் மனு தள்ளுபடி செய்துவிட்டது. தற்போது மீண்டும் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டினார்

இதை ஏற்றுக்கொண்ட  நீதிபதிகள், “மனுதாரர் இதே கோரிக்கையுடன் ஏற்கெனவே தாக்கல் செய்த மனு தள்ளுபடியான நிலையில், மீண்டும் மனு தாக்கல் செய்தது எப்படி? ஒரு பொது நல வழக்கில் ஓர் உத்தரவு தான் பிறப்பிக்க முடியும். மீண்டும் மீண்டும் மனுத் தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதுடன், பொது நல வழக்கு என்ற பெயரில் நீதிமன்றத்தில் தவறான தகவல் அளிக்கும் மனுதாரர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். மேலும்,  இந்த வழக்கில் மனுதாரருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும். இருப்பினும் அபராதம் விதிக்காமல், பட்டாவை ரத்து செய்யக் கோரி பொது நல வழக்கு தாக்கல் செய்ய முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டனர்.

More articles

Latest article