கோவை: 75வது சுதந்திர தினத்தையொட்டி, கோவையில் ஒரு வீட்டில் பறக்கவிடப்பட்ட தேசிய கொடியுடன் கிறிஸ்தவ மத வார்த்தை எழுதப்பட்ட இணைப்பும் சேர்த்து பறக்கவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக பொதுமக்கள் வீடுகளில் கொடி ஏற்றும்படி மத்திய மாநில அரசுகள் அறிவித்திருந்தன. அதன்படி, கடந்த  13ம் தேதியிலிருந்து 15ம் தேதி வரை மூன்று நாட்களில் அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து,  15ம் தேதி மாலை அனைவரும் தேசிய கொடியை இறக்கினர்.

ஆனால், கோவை சுந்தராபுரம் பகுதி மாச்சம்பாளையத்தில் சண்முகம் என்பவரது வீட்டில் தேசியக்கொடி இறக்கப்படாமல் பறக்கவிட்டபடி உள்ளது. மேலும் தேசிய கொடியின் கீழ் “இயேசுவே என் இந்தியாவை ஆசீர்வதியும்” என்ற வாசகமும் எழுதப்பட்டு தேசிய கொடியானது பறக்கவிடப்பட்டு இருந்தது.

இது குறித்து அப்பகுதி மக்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதை தொடர்ந்து சம்பவ இடத்தில் குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய கொடிய அவமதித்த அந்த நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.