சென்னை

திமுக அளித்த 500 தேர்தல் வாக்குறுதிகளில் 300க்கும் மேல் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கிறிஸ்துமஸ் முன்னிட்டு பல இடங்களில் விழா நடந்து வருகிறது.  அவ்வகையில் பெரம்பூரில் கிறிஸ்துமஸ் விழா நடந்து வருகிறது.  அந்த விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். முதல்வர் 1500 பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.  விழாவில் முதல்வரைப் பெரிதும் பாராட்டி உள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் தனது உரையில், “நான் அதிகம் பேசுவதில்லை.  மாறாக முதலமைச்சராகத் தொடர்ந்து செயலில் காட்டுவேன்.  இப்போது பேசியவர்கள், அளித்த பாராட்டுகள் 5 ஆண்டுகளுக்குப் பிறகும் எனது உழைப்புக்குக் கிடைக்க வேண்டும். தட்டுங்கள் திறக்கப்படும் என்பார்கள்; தட்டாமலேயே இங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கொடுத்த 500 வாக்குறுதிகளில் 300-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  எனக்கு பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட  எந்த விழாவில் பங்கேற்றாலும் மகிழ்ச்சி தான். அனைத்து மதங்களுக்கும் அடிப்படை ஒன்று தான் என்ற அடிப்படையில் நான் இங்கு வந்துள்ளேன்.

நமக்கு வாக்களிக்காதவர்களும் பாராட்டும் வகையில் செயல்பட வேண்டும் என்பதே எனது இலக்கு. எங்கள் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக விரைவில் நிறைவேற்றப்படும். நாங்கள் 5 ஆண்டுகளில் செய்ய வேண்டியவற்றை 5 மாதங்களில் செய்து காட்டியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.