கோவை

கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக தேசிய செயலர் எச் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 17 ஆம் தேதி கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில்  சுப. வீரபாண்டியன் தலைமையில் பெண் அடிமை என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்குக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திராவிடர் கழகத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதுடன், மாணவர்களைத் திசை திருப்பும் நோக்கில் செயல்படும் பல்கலைக்கழக துணைவேந்தரைக் கண்டித்தும், கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.  இன்று காலை பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தலைமையில் பல்கலைக்கழகம் முன் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர்.  வடவள்ளி காவல்துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால் இதை ஏற்க மறுத்து எச்.ராஜா தலைமையில் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணியினர் உள்பட 100க்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனவே தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எச்.ராஜா உள்பட 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் கல்வீரம்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.