மதுரை: 

யர்மதிப்புடைய பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நள்ளிரவு பெற்ற சுதந்திரத்தை நவம்பர் 8 நள்ளிரவிலேயே இழந்தோம் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் 8ந்தேதி மத்திய அரசு ரூ.500, 1000 செல்லாது என அறிவித்தது. இதன் காரணமாக நாடு முழுவதும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். மத்திய அரசின் திடீர் நடவடிக்கை காரணமாக, மக்களிடையே பணப்புழக்கம் குறைந்தது.

இந்நிலையில், பண மதிப்பிழப்பு அறிவித்து ஒராண்டு முடிவடைந்துள்ள நிலையில், அதற்கு  எதிர்ப்புத் தெரிவித்து திமுக கூட்டணி கட்சியினர் சார்பாக தமிழகம் முழுவதும் மழை பாதிப்புக்குள்ளான 6 மாவட்டங்களை தவிர்த்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை பழங்காநத்தம் பகுதியில்  இன்று காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து கலந்துகொண்டனர்.  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

பணமதிப்பிழப்பு அறிவிப்பு நாளான இன்றைய தினத்தை கறுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. நவம்வர் 8 வேதனைகள் நிறைந்த நாள் என்றார்.

உயர்மதிப்புடைய பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நள்ளிரவு பெற்ற சுதந்திரத்தை நவம்பர் 8 நள்ளிரவிலேயே இழந்தோம். 125 கோடி மக்களுக்கு துன்பத்தை உருவாக்கிய நாள். துன்பத்தை உருவாக்கி இருக்கக் கூடிய நாளாக இந்த நாள் அமைந்துள்ளது என்றார்.

ஒட்டுமொத்தமாக பணபுழக்கத்தை முடக்கிய ஆட்சி மோடி ஆட்சி என்பதை நாடு உணர்ந்துள்ளது. வங்கிகளில் ஏடிஎம் வாசலில் காத்திருந்த போது மக்கள் மயங்கி விழுந்தார்கள். 100க்கும் மேற்பட்டவர்கள் மாண்டு போனார்கள்.  இதற்கெல்லாம் யார் காரணம். இதற்கு வரும் காலத்தில் மோடி பதில் சொல்ல வேண்டும்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றோம். அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து எதிர்ப்போம்.

கறுப்புப் பணத்தை ஒழிப்பதாக கூறிக்கொண்டு மக்களுக்கு மோடி சுமையை ஏற்படுத்திவிட்டது, இதன் காரணமாக  கூலித் தொழிலாளிகள், முதியவர்கள், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏடிஎம் மையங்கள் வாசல்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் உயிரிழந்தனர் இன்று வரை பலர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.

50 நாட்களுக்குள் 74 முறை மாறி மாறி பல அறிவிப்புகள் வெளியிட்டார்கள். இதனை அறிவிப்பதற்கு முன்னர், ரிசர்வ் வங்கி மத்திய அரசு, மோடி திட்டமிட்டிருக்க வேண்டும். பொருளாதார நிபுணர்களுடன் கலந்து பேசியிருக்க வேண்டும். ஆனால், திட்டமிடவில்லை.

 

ஆனால், எந்தவித திட்டமும் இல்லாமல் ரூபாய் நோட்டு வாபஸ் கொண்டு வரப்பட்டது.

ஏழை, சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டதால் நாங்கள் தொடர்ந்து எதிர்க்கிறோம்.சிறு குறு தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. எத்தனை அச்சுறுத்தல் வந்தாலும் ரூபாய் நோட்டு வாபசிற்கு எதிராக போராடுவோம்.

 

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கு,  பாஜகவின் மூத்த தலைவர்களான  யஷ்வந்த் சின்ஹா, சுப்ரமணியன்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்றும, எந்த திட்டமும் இல்லாமலேயே மத்திய அரசு முன்யோசனையின்றி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது தவறு என்றும்  குற்றம்சாட்டினார்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து பண மதிப்புக்கு எதிராக கோஷமிட்டனர்.