எமர்ஜென்சி நிலைமையில் இருக்கிறோம்…

Must read

நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
அரசு பள்ளியில் ஆசிரியரையே ஆபாசமாக பேசி வகுப்பறையில் கொலைவெறியோடு அடிக்க முனைகிறார்கள் மாணவர்கள்.. மாணவர்கள் சஸ்பெண்ட் என தகவல் வருகிறது.
வெறிபிடித்த மாணவர்களால் ஆசிரியருக்கே இந்த நிலைமை என்றால், ஆசிரியைகளுக்கும் சக மாணவிகளுக்கும் என்ன கதி என்பதை நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது..
போதை பழக்கத்திற்கு அந்த மாணவர்கள் ஆளாகி இருப்பது தெரியவந்தால், சீட்டை கிழித்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அப்போதுதான் மற்ற மாணவர்களுக்கும் பயம் வரும்.. புத்தியும் வரும்..
தாக்குவது, ஆபாசமாகப் பேசுவது, விரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல், “அவர்களின் எதிர்காலம் பாழாகிவிடும் அவர்களின் எதிர்காலம் பாழாகிவிடும்” என்று நெஞ்சை நக்கிக்கொண்டிருந்தால் அவர்களால் பலரின் எதிர்காலம்தான் பாழாகும்.
ஒரு படத்தில் மகான் வடிவேலு, “”இதெல்லாம் வளர்ந்தால் பத்து கொலை நாலு ரேப் பண்ணும்” என்று சொல்லுவார்.. காமெடிக்காக சொல்லப்பட்டாலும் அது தான் அப்பட்டமான உண்மை.
தஞ்சையில் 17 வயது பெண்ணை 12 வயது சிறுவன் ‘பலாத்காரம்’ செய்து ஒரு குழந்தையையே பிரசவிக்க வைத்திருக்கிறான் என்கிறது இன்னொரு தகவல்.
எதற்கெடுத்தாலும்,” சிறுவர்கள் அவர்களுக்கு என்ன தெரியும்?” என்று சொல்கிறார்கள்..
ஆர்வக்கோளாறில் செய்யும் தவறுக்கும், என்னை என்ன புடுங்கி விடமுடியும் என்று சினிமா ஹீரோக்களால் நாசமாக்கப்பட்ட மாணவர்கள் திமிர் தனத்தில் செய்யும் தவறுக்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது..
இந்த இரண்டுக்குமான வித்தியாசத்தை உணர்ந்து அரசாங்கம்,மற்றும் பெற்றோர் ஆகிய இரண்டு தரப்பும் செயல்படாவிட்டால் எக்கேடு கெட்டாவது போங்கள் என்று ஆசிரியர்கள் வெறுமனே பாடம் நடத்துவதோடு ஒதுங்கிக் போய்க்கொண்டே இருப்பார்கள்.
இன்னொரு பக்கம் ஊர் உலகத்தில் எவனுமே பிள்ளை பெற்றுக்கொள்ளாத மாதிரியும் இவர்கள் மட்டுமே பெற்றுக் கொண்ட மாதிரியும், தங்கள் பிள்ளைகளுக்கு எதிராக ஆசிரியர்கள் சிறு கண்டிப்பு காட்டினாலும்கூட சில பெற்றோர்கள் கொதித்தே போய்விடுகிறார்கள்..
கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகாலம் பள்ளிகள் முழுமையாக செயல்பட முடியாமல் மாணவர்கள் வீட்டுக்குள்ளேயே இருந்ததில், கீழ்படியாமை மறைந்து முரட்டுத்தனம் அதிகமாக வளர்ந்து உள்ளது.
ஒரே வரியில் சொன்னால், கல்வியைவிட பயத்துடன் கூடிய ஒழுக்கத்தை கற்றுத் தராவிட்டால் மாணவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் எதிர்காலம் சங்குதான்

More articles

Latest article