சென்னை: எம்எல்ஏக்களுக்கும் கார் கொடுங்க என சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கோரிக்கை வைத்தார். இது அவையில்  சிரிப்பலையை  ஏற்படுத்தியது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று  விதி 110-ன்கீழ், பேசிய முதல்வர்,  தமிழ்நாட்டில் மீண்டும் ஆண்டுதோறும் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி நாளாக மீண்டும் கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அத்துடன்  உள்ளாட்சித் தலைவர்கள் உறுப்பினர்களுக்கான அமர்வு படி தொகை ஐந்து மடங்கு உயர்த்தப்படும் என்று கூறியதுடன், அனைத்து ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும்” என்றும் அறிவித்தார்.

இதையடுத்து பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், கிராம்சபை கூட்டம் நடத்தும் முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பை வரவேற்பதாக கூறியவர்,  உள்ளாட்சி அமைப்புகளை வலு சேர்க்கும் வகையில் அவரின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.அதே நேரத்தில் முதல்வர் ஸ்டாலினின் பார்வை ஊராட்சி அமைப்புகள், பஞ்சாயத்து தலைவர்கள், சேர்மன் வரை வந்துள்ளது. ஆனால் சட்டசபை உறுப்பினர்களின் பக்கம் முதல்வரின் பார்வை வரவில்லை.

எம்எல்ஏக்கள் பக்கமும் முதல்வர் ஸ்டாலினின் பார்வை திரும்ப வேண்டும். எதிர்க்கட்சிகள் பக்கமும் சரி.. ஆளும் கட்சிகள் பக்கமும் சரி..  இதே கருத்து நிலவுகிறது. எல்எல்ஏக்கள் பக்கமும் முதல்வரின் பார்வை பட வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். எனக்கு என்று இல்லை..

தேவைப்படும் எம்எல்ஏக்களுக்கு நீங்கள் கார் கொடுத்து உதவினால் நன்றாக இருக்கும். அதை சிந்தித்து பார்க்க வேண்டும். இது என் வேண்டுகோள் என்று குறிப்பிட்டார்.  இதை கேட்டதும் அவையில் அதிமுக,பாமக, திமுக எம்எல்ஏக்கள் சிரித்தனர். முதல்வர் ஸ்டாலினும் சிரித்தார். தொடர்ந்து பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், அதே சமயத்தில் ஊராட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் கொடுக்கும் அதே வேளையில், ஊராட்சி மன்ற தலைவர்கள், நிர்வாகிகள் வைக்கும் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சி தலைவர்கள் பின்பற்ற வேண்டும்.

இதற்கு ஆட்சி தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் ஊராட்சி தலைவர்கள் சிறப்பாக செயல்பட முடியும். ஊராட்சி மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பணிகளை செய்ய நிதி தேவைப்படுகிறது.

இதற்கு நிதி கொடுக்க வேண்டும். அதேபோல் எல்லா சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பிலோ அல்லது வட்டி இல்லாத கடன் கொடுத்தோ கார் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசினார்.

இதை கேட்ட சபாநாயகர் அப்பாவு, மத்திய அரசிடம் கேட்டு பணம் தர ரெடி பண்ணுங்க. மத்திய அரசிடம் பரிந்துரை செய்து பணம் வாங்கி கொடுத்துவிடுங்கள்.. நன்றாக இருக்கும் என்று சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டார். அவர் சிரித்தபடியே சொல்ல முதல்வர் ஸ்டாலின் இதை கேட்டு சிரித்தார். அதிமுக நிர்வாகிகளும் இதை கேட்டு சிரித்தனர்.