இஸ்லாமாபாத்: ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் மீது ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள தடைகள் உடனடியாக அமல்செய்யப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

ஜெய்ஷ்-இ-முகமது பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் புலவாமா என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், இந்த இயக்கம் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தது.

இந்த இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை, சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கும் உலக நாடுகளின் முயற்சிக்கு, சீனா தொடர்ந்து போட்டுவந்த முட்டுக்கட்டை நீங்கியதை அடுத்து, மசூத் அசாரின் பெயர் தற்போது அப்பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டது.

ஆனால், இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு கிடைத்த ஒரு ராஜதந்திர வெற்றி என்று கூறப்படுவதை பாகிஸ்தான் வன்மையாக மறுத்துள்ளது. அந்நாட்டு தரப்பில் கூறப்படுவதாவது, “தீவிரவாதம் என்பது இந்த உலகிற்கான அச்சுறுத்தல் என்பதை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்கிறது.

ஏகோபித்த சம்மதத்தின் அடிப்படையிலும், தெளிவான விதிமுறைகளின் அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இதன் அடிப்படையிலேயே இந்த முடிவை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்கிறதே ஒழிய, இதை அரசியலாக்குவதை எதிர்க்கிறோம்” என்றுள்ளார்கள்.