திருச்சி: தமிழகத்தில் மீண்டும் மொழிப்போரை உருவாக்கி விட வேண்டாம் என மத்தியஅரசை கடுமையாக சாடிய தவாக (தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் TVK) தலைவர் வேல்முருகன், தமிழ்நாட்டில் போதைபொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது என்றும், தமிழ்நாட்டில் விரைவில் அரசியல் புரட்சி ஏற்படும் என்று திமுக அரசையும் எச்சரித்ததுடன், நாங்கள்தான் டிவிகே என நடிகர் விஜய் கட்சிக்கு எதிராகவும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில், லஞ்சம், ஊழல், மணல் கொள்ளை, சாராயம் அதிகரித்து உள்ளது என்று கூறியிருப்பதுடன், குடும்ப ஆதிக்கத்துக்கு எதிராக அணி திரள்வோம், தமிழ்நாட்டில் விரைவில் அரசியல் புரட்சி ஏற்படும் என திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
கரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் முன்னிலையில் இன்று திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தனர். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மத்திய மாநில அரசை கடுமையாக விமர்சித்தார்.
தமிழகத்திற்கு நிதி ஒதுக்க முடியாது என பேசிய ஒன்றிய அமைச்சரின் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது, தமிழகத்தில் மீண்டும் மொழிப்போரை உருவாக்கி விட வேண்டாம் என எச்சரித்த வேல்முரகன், மும்மொழி கொள்கை என்பது மோசடி, ஏமாற்றும் கொள்கையாகும். தாய்மொழி கொள்கை தான் உலகத்தில் தலை சிறந்த கொள்கை. தற்போது ஆங்கிலம் உலகம் முழுவதும் பேசும் மொழியாக இருப்பதால் அதனை கற்று கொள்ள வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழ் ஆட்சி மொழியாகவும், ஆளும் மொழியாகவும் இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு அலுவலகங்கள், உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழ் மொழியில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும் இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக நெடுஞ்சாலைகள் பகுதி, சுங்கச்சாவடிகளில் ஆங்கில மற்றும் இந்தி மொழியில் பெயர் பலகை இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அங்கு தமிழ் மொழியில் பெயர் பலகை வைக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்திற்கு நிதி ஒதுக்க முடியாது என பேசிய ஒன்றிய அமைச்சரின் பேச்சு அடாவடி தனமான பேச்சு அதை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே உணவு என்பது தமிழ் தேசியம் ஏற்று கொள்ளாது. தமிழ்நாட்டில் மீண்டும் மொழிப்போர் நடத்தும் அளவிற்கான நிலமையை உருவாக்க வேண்டாம் என எச்சரிக்கிறேன். ஒருபோதும் மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ள கூடாது.
ஆனந்த விகடன் இணையதளம் ஒன்றிய அரசால் முடக்கப்பட்டு இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்தியாவின் நான்காவது தூணாக இருக்கக்கூடிய பத்திரிக்கையாளர்களை வஞ்சிக்கும் விதமாக ஒன்றிய அரசு செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் போதை பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது. அதனால் பல குற்றச்சம்பவங்களும் தொடர்ந்து நிகழ்கிறது. தொடர் குற்றங்கள் செய்பவர்கள் போதை பொருள் விற்பனை செய்பவர்கள் பாலியல் வன்கொடுமை தொடர்ந்து செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்ட மசோதாவை வருகின்ற சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்திவர், தமிழ்நாட்டில், லஞ்சம், ஊழல், மணல் கொள்ளை, சாராயம் அதிகரித்து உள்ளது என்று கூறியிருப்பதுடன், குடும்ப ஆதிக்கத்துக்கு எதிராக அணி திரள்வோம், தமிழ்நாட்டில் விரைவில் அரசியல் புரட்சி ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி TVK என தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்துள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் தற்பொழுது விஜய் கட்சி TVK என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அது குறித்து தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதி உள்ளேன். இதுவரை எந்தவிதமான பதிலும் இல்லை. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எதற்காக கட்சி ஆரம்பித்தார்? மக்கள் நலனுக்காக ஆரம்பித்தாரா? அல்லது பின்னால் இருந்து யாரோ தூண்டுதலின் பேரில் கட்சி ஆரம்பித்தாரா? என்பது வருகின்ற காலங்களில் முழுமையாக தெரியவரும்” என்றார்.
Video: Thanks – INews, Trichy