வாஷிங்டன்

மெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து டிரம்ப் விலகினால் தாமும் விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்துள்ளார்.

அடுத்த வருடம் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தற்போதைய அதிபரான ஜோ பைடன், ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட உள்ளார். குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரை எதிர்த்துப் போட்டியிடத் தீவிரமாகக் களம் இறங்கி உள்ளார்.

கொலரோடா நீதிமன்றம் பாராளுமன்ற முற்றுகை தொடர்பான வழக்கை விசாரித்து  அதிபர் பதவிக்குப் போட்டியிட டிரம்ப் தகுதியற்றவர் எனத் தீர்ப்பு வழங்கியது. எனவே கொலராடோவில் குடியரசு கட்சியின் முதல்நிலை வாக்குப்பதிவுக்கான வாக்குச்சீட்டில் டிரம்பின் பெயர் இருக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டது. டிரம்ப் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளார்.

குடியரசு கட்சியில் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் உள்ள விவேக் ராமசாமி, டிரம்புக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார். விவேக் ராமசாமி இந்திய வம்சாவளி தொழிலதிபர் ஆவார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளத்தில் விவேக் ராமசாமி ,

“இந்த தீர்ப்பை சட்டவிரோதமான நடவடிக்கையாகப் பார்க்கிறேன். இது அமெரிக்காவில் மோசமான விளைவை ஏற்படுத்தும். டிரம்ப் பெயர் வாக்குச்சீட்டில் இடம்பெறாமல் இருந்தால் நானும் போட்டியிலிருந்து விலகுவேன். இதே போன்று குடியரசு கட்சியின் பிற வேட்பாளர்களும் விலக வேண்டும்” 

என்று பதிந்துள்ளார்.