ஸ்விட்ஸர்லாந்து நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரரான நிக்கோலஸ் பியூச் தனது 91,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் ரூ. 50 கோடி மதிப்புள்ள வீடு ஆகியவற்றை தனது தோட்டக்காரருக்கு எழுதிவைக்க முடிவுசெய்துள்ளார்.

உலகின் மிக ஆடம்பர பேஷன் நிறுவனமான ஹெர்மஸ் நிறுவனத்தின் வாரிசான நிக்கோலஸ் பியூச் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வரும் நிலையில் வாரிசுகள் யாரும் இல்லாததை அடுத்து இந்த முடிவை எடுத்துள்ளார்.

நிக்கோலஸ் பியூச்

80 வயதான நிக்கோலஸ் பியூச் தன்னிடம் பணிபுரிந்து வரும் மொரோக்கோ நாட்டை பூர்வீகமாகக் கொண்ட 51 வயதான தோட்டக்காரரை தனது மகனாக தத்தெடுக்க உள்ளார்.

ஸ்விட்ஸர்லாந்து நாட்டுச் சட்டப்படி 18 வயது நிறைவடைந்தவர்களை தத்தெடுப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல் இருப்பதை அடுத்து அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார் பியூச்.

1837 ம் ஆண்டு ஹெர்ம்ஸ் பேஷன் நிறுவனத்தைத் துவங்கிய தியரி ஹெர்ம்ஸ் குடும்பத்தின் ஐந்தாவது தலைமுறை வாரிசான நிக்கோலஸ் பியூச் ஹெர்ம்ஸ் நிறுவன நிர்வாகத்தில் இருந்து சமீபத்தில் வெளியேறினார்.

2014 ம் ஆண்டு ஹெர்ம்ஸ் நிறுவனத்தின் முக்கிய பங்குகளை அதன் போட்டி நிறுவனமான LVMHக்கு வழங்க தனது குடும்ப உறுப்பினர்கள் முடிவெடுத்ததை எதிர்த்து நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பியூச் தனது உறவினர்களுடன் சுமூகமான உறவு இல்லாததை அடுத்து தனது வாரிசை தத்தெடுக்க முடிவெடுத்துள்ளார்.

தன்னிடம் நீண்டகாலமாக பணிபுரிந்துவரும் தோட்டக்காரரை தனது வாரிசாக தேர்ந்தெடுத்திருக்கும் பியூச் அவருக்கு தனது சொத்தில் 91,000 கோடி ரூபாயும் 50 கோடி ரூபாய் மதிப்பில் நிலம் மற்றும் வீடு ஆகியவற்றை எழுதிவைக்க உள்ளார்.