விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு

Must read

unnamed-16
ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுத்து அதை தயாரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை…. 2016 ஆம் ஆண்டு துவங்கி இன்று வரை ஏறக்குறைய 150 க்கும் அதிகமாக படங்கள் வெளியாகி உள்ளன… ஆனால் அவற்றுள் வெகு சில திரைப்படங்களுக்கு மட்டும் தான் ரசிகர்களின் உள்ளங்களை வெல்ல கூடிய ஆற்றல் இருந்திருக்கின்றது… அந்த வகையில், தரமான திரைப்படங்களை மட்டுமே ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு தயாரிப்பு துறையில் களம் இறங்கி இருக்கும் ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ நிறுவனத்தின் நிறுவனர் ஜி டில்லிபாபு, தனது பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற ‘உறுமீன்’ திரைப்படம் மூலம் தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைத்த ஜி டில்லி பாபு, தற்போது ஆதி – நிக்கி கல்ராணி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் ‘மரகத நாணயம்’ படத்தை தயாரித்து வருகிறார்…. அதனை தொடர்ந்து, தங்களுடைய ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ நிறுவனத்தின் மூன்றாம் தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறார் ஜி டில்லி பாபு. வெற்றிகரமான நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் விஷ்ணு விஷால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் 11.11.2016 ஆம் தேதி அன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
இயக்குநர் ராம் குமார் இயக்க இருக்கும் இந்த பெயரிடப்படாத படத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் பி வி ஷங்கர், கலை இயக்குநர் ஏ கோபி ஆனந்த் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஏ கீர்த்தி வாசன் ஆகியோர் பணியாற்றுவது மேலும் சிறப்பு… அதுமட்டுமின்றி, நடிகர்கள் காளி வெங்கட் மற்றும் முனிஷ் காந்த் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர்…. இந்த படத்தின் மூலமாக ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ நிறுவனத்தோடு இணைந்து பணியாற்ற இருக்கிறார் ‘ஸ்கைலார்க் மீடியா’ ஸ்ரீதர்.
“தமிழ் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகிலும் மிக முக்கியமான நாளாக கருதப்படுவது வெள்ளிக்கிழமைகள் தான். எனவே எங்களின் படப்பிடிப்பு வேலைகளை 11.11.2016 (வெள்ளிக்கிழமை) அன்று நாங்கள் பூஜையுடன் ஆரம்பித்து இருக்கிறோம்…. தற்போது கதாநாயகி மற்றும் ஏனைய தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது…. வருகின்ற நவம்பர் 29 ஆம் தேதி முதல் நாங்கள் படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்க திட்டமிட்டு இருக்கிறோம்…” என்று உற்சாகமாக கூறுகிறார் தயாரிப்பாளரும், ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ நிறுவனத்தின் நிறுவனருமான ஜி டில்லி பாபு.

More articles

Latest article