சர்வதேச கிரிக்கெட் கவுன்சிசின்(ஐசிசி) சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Virat

சர்வதேச அளவில் சிறந்த கிரிக்கெட் வீரர்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து ஐசிசி விருது வழங்கி கவுரவிக்கிறது. அதன்படி ஐசிசியின் சிறந்த வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுமட்டுமின்றி, ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரின் சிறந்த வீரருக்கன விருதையும் விராட் தட்டிச் சென்றார்.

இதுமட்டுமின்றி, ஐசிசி தனது சிறந்த ஒருநாள் அணியையும், டெஸ்ட் அணியையும் தேர்வு செய்துள்ளது. இந்த இரு அணிகளுக்கும் கேப்டனாக விராட் கோலியை நியமித்து ஐசிசி அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 5 சதங்கள் உள்பட 1,322 ரன்களையும், 14 ஒருநாள் போட்டிகளில் 6 சதங்கள் உள்ளிட்ட 1,202 ரன்களையும் சேர்த்துள்ளார். இதன் மூலம் ஐசிசியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரின் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் கோலி முதலிடம் பிடித்தார்.

ஐசிசி அறிவித்துள்ள விராட் கோலி தலைமையிலான டெஸ்ட் அணியில் இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இதேபோன்று ஒருநாள் போட்டியில் கோலியுடன் சேர்ந்து ரோஹித் சர்மா, குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். டெஸ்ட் மற்றும ஒருநாள் அணியில் பும்ரா இடம் பெற்றுள்ளார்.

இதுமட்டுமின்றி, ஐசிசியின் சிறந்த அணிக்கான வரிசையின் டெஸ்ட் தொடரில் இந்திய அணியும், ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியும் உள்ளன. 2018ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை விளையாடிய இந்திய அணி 6 போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் வெற்றிகளை இந்திய அணி பெற்றது. ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 வெற்றிகளும், 4 தோல்விகளும், ஒரு போட்டி சமனிலும் முடிந்தது குறிப்பிடத்தக்கது.