சென்னை: பாஜகவில் இணைந்த காங்கிரஸ்  எம்எல்ஏ விஜயதாரணி தனது பதவியை ராஜினாமா செய்த  நிலையில், அவரது தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு கெஜட்டில் வெளியிட்டு உள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ., விஜயதரணி,  பிப்ரவரி 24ந்தேதி டெல்லி சென்று மத்திய அமைச்சர் முருகன் முன்னிலையில். பா.ஜ.,வில் இணைந்தார். இதனையடுத்து எம்.எல்.ஏ., பதவியை அவர் ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை சபாநாயகர் அப்பாவுக்கு அனுப்பி வைத்தார்.

இந்த கடிதம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  சபாநாயகர் அப்பாவு, அவரது ராஜினாமா ஏற்கப்படுவதாக அறிவித்தார்.   விஜயதரணி முறைப்படி ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார். என்னை தொலைபேசியில் அழைத்து எம்.எல்.ஏ., பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். கடிதத்தை ஆய்வு செய்ததில், முறையாக விஜயதரணி பதவி விலகல் கடிதம் கொடுத்துள்ளார். எனவே அவர் பதவி விலகலை நான் ஏற்றுக் கொள்கிறேன். இது குறித்த ஆவணங்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். பிறகு,முறைப்படி விளவங்கோடு காலியாக இருப்பதாக அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில்,  விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி ஜனவரி 24ம் தேதியில் இருந்து காலியானதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பு அரசு கெஜட்டிலும் வெளியிடப்பட்டு உள்ளது.