சென்னை:
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், அவரை எதிர்த்து கூட்டணி கட்சியான பாமகவைச் சேர்ந்த நிர்வாகி ராஜா சுயேச்சையாக களமிறங்கி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் ராதாமணி மரணம் அடைந்து விட்டதைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் நாங்குனேரி தொகுதி, புதுச்சேரி மாநிலம் காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதி உள்பட நாடு முழுவதும் ஏராளமான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 21ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. அதன்படி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக முத்தமிழ்ச் செல்வன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில், அதிமுக கூட்டணி கட்சியான பாமக தரப்பில் இருந்து சுயேச்சையாக முன்னாள் அமைப்புச் செயலாளர் ராஜா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இன்று தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்ற ராஜா, தேர்தல் அதிகாரியுடன் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
இதன் காரணமாக அதிமுக, பாமக இடையே சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.