தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவராக, இந்தியா சிமென்ட்ஸ் உரிமையாளரான என்.சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் நாளை அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட உள்ளார்.

இந்தியா சிமெண்ட்ஸ் உரிமையாளரான என். சீனிவாசன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பதவியில் இருந்து வருகிறார். அத்துடன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக செயல்பட்டார். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராகவும் சீனிவாசன் இருந்து வந்தார்.

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாகவே செப்டம்பர் 24ம் தேதிக்குள் மாநில சங்க நிர்வாகிகள் தேர்தல் நடைபெற வேண்டும் என பிசிசிஐ நிர்வாகிகள் குழு அறிவுருத்தியிருந்தது. இதனை தொடர்ந்து 26ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், வேட்புமனு தாக்கல் செய்ய 25ம் தேதியே கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

தேர்தலில் போட்டியிட ரூபா குருநாத் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ரூபாவை எதிர்த்து போட்டியிட யாரும் விரும்பாத காரணத்தால், போட்டியின்றி நாளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அதிகாரப்பூர்வமாக அவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதன் மூலம் முதல் பெண் தலைவராக ரூபா இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாவின் கணவர் குருநாத் மெய்யப்பன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாகியாக செயல்பட்டு, கடந்த 2013 ஐபிஎல் சீசனில் ஸ்பாட் பிக்ஸிங், பெட்டிங் புகார் காரணமாக வாழ்நாள் தடை விதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.