விஜய் – ரஜினி

 

 

பொதுவாக கமர்சியல்  ஹீரோக்கள், ரஜினி வழியைத்தான் நாடுவர். காமெடி, சண்டை, பஞ்ச் டயலாக் என்று அப்படியே அவர் வழிதான். அதிலும் விஜய், அப்படியே ரஜினியை பின்பற்றுவதாக விமர்சனம் உண்டு.

இப்போது இன்னொரு விசயத்திலும் ரஜினியை பின்பற்றியிருக்கிறார்.

தன்னை நிஜத்தில் எதிர்த்து பேசிய மனோரமா, மன்சூர் அலிகான் போன்ற நடிகர்களுக்கு தனது படத்தில் வேடம் கொடுத்து, தன்னை அவர்கள் புகழ்வது போல நடிக்க வைப்பது ரஜினி பாணி.

அதே பாணியைத்தான் இப்போது பின்பற்றியிருக்கிறார் விஜய்.

பெயரிடப்படதாக  அவரது அடுத்த படத்தை (விஜய் 62)  ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார் அல்லவா…   அதில் வில்லனாக நடிக்க இருப்பவர் அரசியல் பிரமுகர் பழ. கருப்பையா.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அரசியல் பிரமுகர், பழ. கருப்பையா நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கடுமையாக விமர்சித்தார்.

“ஒரு விவசாயி பருவமழையை எதிர்பார்த்து விவசாயம்  செய்வது போல் நடிகர்கள் தேர்தலை எதிர்பார்த்து அரசியல் செய்ய கூடாது.   தேர்தல் வரும் போது கடையை விரிப்பது. வெற்றிபெற்றால் கடையை தொடர்ந்து நடத்துவது. இல்லாவிட்டால் மூடிவிட்டு போவது என்கிற மனப்பான்மையோடு  இருந்துவிட்டால் மக்கள் நடிகர்களை பின்பற்ற மாட்டார்கள்” என்றார்.

பழ. கருப்பையா

ரஜினி, கமல் ஆகியோருடன் விஜய்யின் பெயரைச் சொல்லியும் கடுமையாக விமர்சித்தார்.

“நடிகர் விஜய் தனது மெர்சல் படத்துக்கு சிக்கல் வந்து விடக் கூடாது என்பதற்காக முதல்வரை சந்தித்து பேசியிருக்கிறார். இவர் இப்படிப்பட்ட மனநிலையோடு இருந்தால் ஒரு காலத்திலும் மக்களுக்காக பேசமுடியாது. யாருக்காக நீங்கள் பேசுகிறீர்களோ அவர்களுக்கு எதிரானவர்கள் எல்லாம் உங்களை எதிர்ப்பார்கள்” என்றார் பழ.கருப்பையா.

இந்த பழ. கருப்பையாவைத்தான் தனது புதுப்படத்துக்கு வில்லனாக புக் செய்திருக்கிறார் விஜய்.

ஆரம்பத்தில் வில்லனாக வரும் பழ.கருப்பையா, ஒரு கட்டத்தில் “மனம் திருந்தி” விஜய்யை வாழ்த்துவாராம்.

அதாவது அதே ரஜினி பாணி!