சென்னை,
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்க போராட்டத்தை புறக்கணித்த விஜய், இன்று சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டத்தில் மக்களோடு இணைந்தார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிகம் முழுவதும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 5 வது நாளாக போராட்டம் நடத்தி வரும் வேளையில், நேற்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெற்றது.
இதில் ரஜினி, கமல், அஜித் உள்பட பலர் முன்னனி நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டனர். ஆனால் நடிகர் விஜய் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இது நடிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டத்தில், நேற்றிரவு நடிகர் விஜய் கலந்துகொண்டார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடிகனாக அல்லாமல் ஒரு தமிழனாக மக்களோடு மக்களாக போராட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது மக்கள் அவரை சூழ்ந்துகொள்ளக்கூடாது என்பதற்காக முகத்தை கர்சீப்பால் முகமூடிபோல கட்டிக் கொண்டு போராட்டத்தில் கலந்துகொண்டார்.
அவரது புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.