ராமர் கோயில் விவகாரம் : உத்தவ் தாக்கரே மீது வி.எச்.பி. பாய்ச்சல்..

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை அடுத்த மாதம் 5 ஆம் தேதி நடைபெறுகிறது.

’’கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையை காணொலி காட்சி மூலம் நடத்தலாம்’’ என மகாராஷ்டிர முதல்-அமைச்சரும், சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே யோசனை தெரிவித்திருந்தார்.

அவரது கருத்துக்கு விசுவ இந்து பரிஷத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

‘’இந்துக்கள் எந்த ஒரு கட்டுமான பணியை ஆரம்பிக்கும் போதும்  பூமித்தாயை வணங்கி விட்டுத்தான் தொடங்குவார்கள். அவளது ஆசியைப் பெற்ற பின்னரே பூமியைத் தோண்டுவது வழக்கம். ’’ என்று விசுவ இந்து பரிஷத் செயல் தலைவர் அலோக் குமார் குறிப்பிட்டுள்ளார்.

‘’பால் தாக்கரேயால் ஆரம்பிக்கப்பட்ட இந்துத்வா கட்சியான சிவசேனாவின்  தலைவர் கண்மூடித்தனமாக இப்படி ஒரு கருத்தைக் கூறியுள்ளது வருத்தம் அளிக்கிறது’’ என்று தெரிவித்துள்ள அவர்’’ இந்த பூமி பூஜையில் விதிகளைப் பின்பற்றி 200 பேர் மட்டுமே பங்கு கொள்வார்கள் என்று விசுவ இந்து பரிஷத் ஏற்கனவே அறிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

-பா.பாரதி.