200 அடி குழிக்குள் ராமர் கதை சொல்லும் ’’காலப்பெட்டகம்’’..
 
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் இடத்தில் 200 அடி குழி தோண்டி ராமர் வரலாறு அடங்கிய ‘’காலப்பெட்டகம்’’ புதைக்கப்படுகிறது.
சமஸ்கிருத  மொழியில் எழுதப்பட்ட ராமரின் கதை  மற்றும் அயோத்தியின் நீண்ட வரலாறு ஆகிய அம்சங்கள் இந்த காலப்பெட்டகத்தில் இடம் பெறும்.
தாமிர பட்டயத்தில் தற்போது ராமரின் சரித்திரம் உள்ளிட்ட குறிப்புகள் அறிஞர்களால் எழுதப்பட்டு வருகிறது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உரிமை பெற்றுள்ள ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை உறுப்பினர் காமேஷ்வர் இந்த தகவலைத் தெரிவித்தார்.
’எழுத்துப்பணி இன்னும் முடியாததால், பூமி பூஜை நடக்கும் 5 ஆம் தேதி இந்த பெட்டகம் புதைக்கப்படாது.. அனைத்து பணிகளும் முடிந்த பின் இன்னொரு நாளில் ’காலப்பெட்டகம்’’ புதைக்கப்படும்’’ என்று அவர் குறிப்பிட்டார்.
’’சமஸ்கிருத மொழியில் எதற்காக இந்த குறிப்புகள் எழுதப்படுகின்றன?’’ என்று கேட்ட போது’’சமஸ்கிருத மொழியில் குறைந்த வார்த்தைகளில் பெரிய பெரிய வாக்கியங்களை எழுத முடியும்’’ என்று காமேஷ்வர்  கூறினார்.
‘’ராமஜென்ம பூமிக்காக நீண்ட காலம் நடந்த போராட்டம் உள்ளிட்ட விவரங்கள் இந்த காலப்பெட்டகத்தில் இடம் பெறும்..அடுத்த தலைமுறைக்கு இது உபயோகமாக இருக்கும்’’ என்று அவர் மேலும்  கூறினார்.
-பா.பாரதி.