சென்னை

சென்னை கோயம்பேடு அங்காடியில் காய்கறிகள் விலை குறையத் தொடங்கி உள்ளது.

 

தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக கோயம்பேடு சந்தைக்குக் காய்கறிகள் வரத்து குறைந்து,  எனவே காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்து மொத்த விலையில் தக்காளி கிலோ ரூ.110, கத்தரிக்காய், பீன்ஸ் தலா ரூ.80, முருங்கைக்காய் ரூ.160 என விற்கப்பட்டன.

காய்கறிகள் வரத்து குறைந்ததால் பெரும்பாலான காய்கறிகளின் விலை கிலோ ரூ.60-க்கு மேல் விற்கப்பட்டன. இந்நிலையில் மழை நின்றதால் மீண்டும் போக்குவரத்து தொடங்கி கோயம்பேட்டுக்குக் காய்கறிகள் வரத்து அதிகரித்தது.  எனவே கடந்த சில நாட்களாகச் சந்தையில் காய்கறிகளின் விலை குறையத் தொடங்கியது.

கோயம்பேடு சந்தையில் நேற்றைய நிலவரப்படி,பீன்ஸ் ரூ.35, பீட்ரூட், கேரட், தக்காளி, வெண்டைக்காய் தலா ரூ.50, பாகற்காய், புடலங்காய் தலா ரூ.25, கத்தரிக்காய், வெங்காயம், நூக்கல், முள்ளங்கி, உருளைக்கிழங்கு தலாரூ.20 முட்டைக்கோஸ் ரூ.30, முருங்கைக்காய் ரூ.120,சாம்பார் வெங்காயம், அவரைக்காய் தலா ரூ.40 என விற்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து கோயம்பேடு சந்தை மொத்த வியாபாரிகள், “கோயம்பேடு சந்தைக்கு தற்போது காய்கறி வரத்து அதிகரித்துள்ளது.   இதனால் காய்கறிகளின் விலை குறையத் தொடங்கியுள்ளது.  வரும் பொங்கலுக்குப் பிறகு காய்கறிகளின் விலை மேலும் குறையலாம்” எனத் தெரிவித்துள்ளனர்.