சென்னை: தவெகவுக்கு ஆதரவாக அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யப்பட்டிருப்பது, தமிழ்நாடு அரசியலில் குதிரை பேரம் நடந்தது நிரூபணமாகி உள்ளது. அதனால், இதுருகுறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.அதுபோல குடியரசு தலைவருக்கும் மனு அனுப்பப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசியலில், தவெகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், சிறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சிகள் எந்த நேரத்திலும் ஆதரவை வாபஸ் வாங்கலாம் என நிலையில், தவெக அரசு நடைபெற்று வருகிறது. இதனால், முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியில் இருக்க தேவைப்படும் எம்எல்ஏக்களை மாற்றுக்கட்சிகளில் இருந்து இழுக்க திரைமறைவு குதிரை பேரம் நடைபெற்று வருகிறது.
இந்த குதிரை பேரத்தில் பலர் மயங்கி தவெகவுக்கு தாவி வருகின்றனர். சமீபத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ள நிலையில், மேலும் பலர் தவெகவுக்கு செல்ல தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததில் குதிரை பேரம் நடந்துள்ளது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு வழக்கறிஞர் மனு அனுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குநர்கள், மத்தி சட்டத்துறை அமைச்சர், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆகியவற்றிற்கு மனு அனுப்பி உள்ளார்.
அவரது மனுவில் , தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் கட்சியின் கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த நடவடிக்கைக்கு எதிராக தகுதி நீக்க மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அவை தற்போது சபாநாயகர் பரிசீலனையில் உள்ளன.
இந்நிலையில் எம்எல்ஏக்கள் மரகதம் குமாரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோர், தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் உடனடியாக ஏற்றுக் கொண்டுள்ளார். இவர்கள் தலைமைச் செயலக வளாகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்து, தவெகவில் தங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டுள்ளனர். இந்த ராஜினாமாக்கள் சட்ட விரோத அரசியல் குதிரை பேரம் மூலம் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டவை என்பதை தெளிவாக நிரூபிக்கிறது.
இந்த விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மூலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவும், தேர்தலில் வெற்றி பெற்ற குறுகிய காலத்திலேயே ராஜினாமா செய்யும் உறுப்பினர்கள், அச்சட்டமன்றத்தின் மீதமுள்ள காலம் முழுவதும் அல்லது குறைந்தது 5 ஆண்டுகள் வரை எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட தடை விதிக்கும் வகையில் அவசர சட்டத் திருத்தம் அல்லது அரசாணை கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.
அதுபோல, தமாகா கொங்கு மண்டல எஸ்.சி-எஸ்.டி பிரிவு பொதுச்செயலாளர் சின்னையன், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள் மனுவில் , நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி சத்தியபாமா, பெருந்துறை தொகுதி ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் தொகுதி இசக்கி சுப்பையா ஆகிய 4 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
இவர்களின் இந்த பொறுப்பற்ற செயலால், பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணமும், அரசு அதிகாரிகளின் உழைப்பும் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த 4 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த அரசுக்கு ஏற்பட்ட செலவுத்தொகையை சம்பந்தப்பட்ட அந்த நான்கு நபர்களிடமிருந்தே வசூல் செய்ய வேண்டும். மேலும், அவர்கள் இனிவரும் காலங்களில் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாதவாறு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவின் நகல்களை இந்திய தேர்தல் ஆணையர், தமிழக ஆளுநர் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.இதேபோல மதுரை மானகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார், தமிழ்நாடு சபாநாயகருக்கு அனுப்பிய மனுவில், அதிமுக கொறடா உத்தரவை மீறி தவெகவுக்கு வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்து உள்ளார்.
[youtube-feed feed=1]