சென்னை:  திமுக தலைமையிலான கூட்டணியில், இடங்களை ஒதுக்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக, நேற்று நடைபெற்ற 2வது கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் மக்கள் நலக்கூட்டணி உருவாகுமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில்,  திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் 180 இடங்களில் போட்டியிட  தீர்மானித்துள்ளது. இதன் காரணமாக, கூட்டணி கட்சிகளுக்கு மிகக்குறைந்த அளவிலான தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்துள்ளது. இது, கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. முதல் கட்ட பேச்சுவார்த்தையின்போது, இஸ்லாமிய கட்சிகள் மட்டுமே, திமுக ஒதுக்கிய இடங்களை பெற்றுக்கொண்ட நிலையில், மற்ற கட்சிகள் ஏற்க மறுத்து விட்டன.

இதையடுதது, நேற்று நடைபெற்ற  2ம் கட்ட பேச்சுவார்த்தையின்போதும் உடன்பாடு ஏற்பாடாத நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பேச்சுவார்த்தைக்கு வராமல் புறக்கணித்தது. இந்த நிலையில்,  விசிக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் பேசிய தலைவர் திருமாவளவன், தலைமை எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைக்க வேண்டும் என கூறினார்.  இது மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையில் திமுகவின் அணுகுமுறை பிக்பிரதர் போல உள்ளதாக கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதனால், திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

திமுக கொடுக்கும் தொகுதிகளை ஏற்பதில் காங்கிரஸ் கட்சியும் அதிருப்தியுடன் உள்ள நிலையில், வைகோ, கம்யூனிஸ்டு கட்சிகள், விசிக போன்ற கட்சிகள் வெளிப்படையாகவே தங்களது  மனக்குமுறலை தெரிவித்து வருகின்றன.

தேர்தலுக்கு முன்புவரை அனைத்து கட்சிகளையும் அனைத்துச்சென்ற திமுக தலைமை, தற்போது புறக்கணித்து வருவது கட்சித்தலைவர்களியே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டி செயல்பட்டு வரும் திமுக தலைமை, கடந்த சில மாதங்களாகவே திமுக 180 தொகுதிகளுக்கு மேல்தான் நிற்கப்போகிறோம் என்பதை மறைமுகமாக கூறிய வந்துள்ளது. ஆனால், அதை கூட்டணி கட்சிகள் கண்டுகொள்ளாத நிலையில், தற்போது, திமுக தனது பிடிவாதத்தை தளர்த்த மறுத்து, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை குறைத்துள்ளது.

அதாவது, காங்கிரஸுக்கு 16 முதல் அதிகபட்சமாக 20 தொகுதிகள்தான் தர முடியும் என்றும்,   இடதுசாரிகளுக்கு 6 தொகுதிகள், மதிமுகவுக்கு 7 அல்லது 8, திருமா கட்சிக்கும் ஒற்றைப்படை எண்ணில் தொகுதிகள் தரமுடியும் என்று கறாராக கூறிவிட்டது. இதனால், செய்வதறியாது திகைக்கும் திமுக கூட்டணி கட்சிகள்,  மீண்டும்  மக்கள் நலக்கூட்டணியை உருவாக்கி, தேர்தலை சந்திப்பதா அல்லது மாற்று கட்சிகளின் கூட்டணியில் சேருவதா என்பது குறித்து யோசிக்கத் தொடங்கி உள்ளது.

ஏற்கனவே தமிழக அரசியல் களத்தில் 4 அணிகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மக்கள் நலக்கூட்டணியும் உருவானால், தமிழக தேர்தல் களம் தகிக்கும் என்பதை மறுக்க முடியாது அதேவேளையில், வாக்குகள் பிரிந்து,  வெற்றி வாய்ப்புகளும் மாறும் என்பதும் மறுக்க முடியாது.