ஜெ.வை எதிர்க்கும் வசந்திதேவி யார்?

Must read

1
தற்போது தமிழகத்தின் பார்வை, ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே. நகரில் போட்டியிடும் வசந்திதேவியை நோக்கி திரும்பியிருக்கிறது.
1938ஆம் ஆண்டில் பிறந்த வசந்திதேவியின் சொந்த ஊர் திண்டுக்கல் ஆகும். வரலாற்றில் முதுகலைப் பட்டமும் பிஎச்.டி. பட்டமும் பெற்றவர். கல்லூரிப் பேராசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றியவர்.  1992 முதல் 1998 வரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இரண்டுமுறை துணைவேந்தராகப் பணியாற்றினார்.
2002 முதல் 2005 வரை தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவியாகப் பொறுப்பு வகித்தார்.  தமிழ்நாடு திட்டக்கமிஷனின் உறுப்பினராகவும்  இருந்தார். தற்போது மனித உரிமைக் கல்வி நிறுவனத்தின் தலைவராக பொறுப்பு வகிக்கிறார்.
கல்வியாளரான வசந்திதேவி இடதுசாரி பார்வை கொண்டவர். பல்வேறு சமூக அமைப்புகளோடு இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பவர்.
தமிழ கல்வியாளர்கள் வட்டத்தில் மட்டுமின்றி, உலக அளவில் கல்வித்துறையாளர்களிடையே நன்கு அறிமுகமானவர் வசந்திதேவி.
ஆர்.கே.நகர் தொகுதியினை விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டு பெற்றிருந்தாலும், இது பொது தொகுதி என்பதால் தேமுதிக – மக்கள் நலக்கூட்டணியின் பொது வேட்பாளராகவே வசந்திதேவி நிறுத்தப்பட்டுள்ளார்.
இவருடைய தாய்வழித் தாத்தா ‘சக்கரைச்செட்டியார்’ என்பதில் உள்ள “செட்டியார்” மீனவர்களுக்கான ஒரு பட்டப்பெயர். அக்காலத்தில் தொழிற்சங்கம் துவங்கிய முன்னோடிகளில் ஒருவர். கிறிஸ்தவரான அவர் சாதி மதம் கடந்து தொழிலாளர் ஒற்றுமைக்காக உழைத்தவர்.
வசந்திதேவியின் தந்தை, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேரந்தவர். திண்டுக்கல்லில் பிரபல வழக்கறிஞராக இருந்தவர்.
வசந்தியின் கணவர் சுப்பிரமணியம்  பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பர். ஜெயகாந்தனின் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.
முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம் வசந்தியின் சித்தப்பா ஆவார்.
வசந்தியின் மகனும் மகளும் அமெரிக்காவில்  வசிக்கிறார்கள். அமெரிக்கர்களையே திருமணம் செய்துகொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டனர்.
வசந்திதேவி நிறுத்தப்பட்டதன் மூலம் ஆர்.கே. நகர் தொகுதி பெண்களுக்கான தொகுதி என்பதுபோல் ஆகிவிட்டது. அ.தி.மு.க. சார்பில்  ஜெயலலிதாவும், தி.மு.க. சார்பில் சிம்லாவும், வி.சி. சார்பில் பொது வேட்பாளராக வசந்திதேவி, பா.ம.க. சார்பில் ஆக்னஸும், நாம் தமிழர் சார்பில் திருநங்கை தேவியும் போட்டியிடுகிறார்கள்.
 

More articles

Latest article