அத்தியாயம்: 6 
‘அச்சம் என்பது மடமையடா’ என்றொரு புதுப்படத்துக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள்.
அதென்ன மடமை?
பெண்களுக்கான நான்கு குணங்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பார்கள். அதிலுள்ள மடம்தான் இங்கே ‘மை’ சேர்ந்து குணப்பெயராக நிற்கிறது.
பெரிய என்ற சொல்லைப்பண்பாகச் சொல்லும்போது  ‘மை’ சேர்த்துப் பெருமை என்கிறோம், சிறிய என்ற சொல்லை ‘மை’ சேர்த்துச் சிறுமை என்கிறோம், அதுபோல, மடம் என்பதிலிருந்து மடமை வந்தது.
மடம் என்ற சொல்லின் பொருளைத் தெரிந்துகொள்ள, புகழேந்திப் புலவர் எழுதிய நளவெண்பாவுக்குச் செல்வோம்.
acham_enbathu_madamaiyada-2016
நிடதநாட்டு அரசன் நளன். அவனுடைய தோட்டத்தில் ஓர் அன்னம் தென்படுகிறது. அதைப்பிடித்து வரச்சொல்கிறான் நளன். பயத்தில் நடுங்குகிறது அன்னம். அப்போது அவன் சொல்கிறான், ‘அஞ்சல், மடஅனமே!’
‘அஞ்சல்’ என்றால் கடிதாசி அல்ல, ‘அஞ்சாதே’ என்று பொருள். ‘அனமே’ என்றால் அன்னமே. நடுவில் இருக்கும்  ‘மட’ என்ற சொல்லுக்கு இளமை என்றுபொருள். ஆக, அன்னத்திடம், ‘இளைய அன்னமே, பயப்படாதே’ என்கிறான் நளன்.
‘மடம்’ என்றால் இளமை, ‘மடமை’ என்றாலும் இளமைதான். ‘அச்சம் என்பது மடமையடா’ என்றால், பயப்படுவது சின்னப்பசங்களோட வேலை என்று பொருள்!
ஆனால், இன்றைக்குப் பலர் ‘மடமை’  என்ற சொல்லை முட்டாள்தனத்துடன் ஒப்பிடுகிறார்களே, ‘மடப்பயலே’ என்று திட்டுகிறோமே.
அதுவும் சரிதான், இளவயதில் நமக்கு அதிக விஷயங்கள் தெரிந்திருக்காது, கொஞ்சம் முட்டாள்களாகதானே இருப்போம்!
(தொடரும்)