ஐதராபாத்: மொத்தம் 44 வந்தே பாரத் ரயில் செட்களை உருவாக்கும் வகையில், ரூ.2211 கோடிகள் மதிப்பிலான பெரிய ஒப்பந்தம், ஐதராபாத்தை தலைமையகமாக கொண்ட மேதா செர்வோ டிரைவ்ஸ் (பி) லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு பெரிய ஊக்கமளிக்கும் செயலாக இது பார்க்கப்படுகிறது. அந்த ரயில் ‘வந்தே பார்த் எக்ஸ்பிரஸ் அல்லது டிரெய்ன் 18’ என்று அழைக்கப்படுகிறது.

தொழில்நுட்பப் பிரச்சினைகள் காரணமாக, முந்தைய டெண்டர் செயல்பாடுகள் ரத்துசெய்யப்பட்டன. ஆனால், தற்போது தொழில் நிறுவனத்துடன் பல விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே, தற்போதைய டெண்டர் செயல்பாடு நடைபெற்று முடிந்துள்ளது.

இதன்படி, டெண்டரின் மொத்த மதிப்பில், குறைந்தபட்சம் 75% உள்ளடக்கம் தேவைப்படுகிறது. இதனால், ‘ஆத்மநிர்பார் பாரத்’ திட்டத்திற்கு நல்ல ஊக்கம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்கள், இந்தியாவின் 3 ரயில்வே தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும். சென்னையின் ஐசிஎஃப் தொழிற்சாலை, கபுர்தலா ரயில்வே தொழிற்சாலை மற்றும் ரேபரேலி ரயில்வே தொழிற்சாலை ஆகியவைதான் அவை.