சென்னை:

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ இன்று மௌனவிரதம் இருக்கிறார்.

2009-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியதற்காக வைகோ மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது காவல்துறை. அதன் பிறகு எந்தவித நடவடிக்கையும் இல்லை.

வைகோ வெளிநாடு செல்வதற்கு இந்த வழக்கு தடையாக இருந்தது. ஆகவே கடந்த 3ம் தேதி சென்னை எழும்பூர் அல்லிகுளம் நீதிமன்றத்தில் ஆஜரான வைகோ,  தம் மீதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்; இல்லையெனில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் முடிவில் வைகோவை 15 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்புவதாக நீதிபதி கோபிநாத் தெரிவித்தார்.

அத்துடன் வைகோ சொந்த ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் நீதிபதி கூறினார்.

ஆனால் வைகோ தான் ஜாமீன் பெற விரும்பவில்லை என்று வைகோ தெரிவித்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று வைகோ சிறையிலேயே மௌனவிரதம் இருக்கிறார். வைகோவின்  தந்தை  வையாபுரி கடந்த 1973 ம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி மறைந்தார். இதையொட்டி வருடாவருடம் தனது தந்தையின் நினைவு நாளான ஏப்ரல் 5 ஆம் தேதி வைகோ மவுன விரதம் இருந்து வருகிறார்.

கடந்த 44 வருடங்களாக இந்த நாளில் மௌன விரதம் இருக்கும் வைகோ, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தண்ணீர்கூட குடிக்கமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.