சென்னை: மதிமுகவில் தனது குடும்பத்தினர் யாரும் பதவிக்கு வரமாட்டார்கள் என்று கூறி வந்த வைகோ, சமீபத்தில் தனது மகன் துரை வையாபுரிக்கு பதவி வழங்கி அழகு பார்த்தார். இதற்கு 3 மாவட்டச் செயலாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையிர் அவர்களை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உத்தரவிட்டுள்ளார்.

வைகோவின் மகன் துரை வையாபுரி.  எம்பிஏ பட்டதாரியான அவர்  முன்பு ஐடிசி புகையிலை பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியின் பெரும் ஏஜண்டாக இருந்து பணம் சம்பாதித்தவர். அதன் சகாப்தம் குறைந்து வந்ததால், தற்போது சென்னையில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அரசியலே விரும்பாத வையாபுரி, தற்போது, அப்பா வைகோவை பின்பற்றி  அரசியல் தொழிலுக்குள் காலடி எடுத்து வைத்தாளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மதிமுக சார்பில் நடத்தப்பட்ட  திராவிட பயிற்சிப் பாசறையில் கலந்துகொண்டு தனது அரசியல் ஆசைக்கு அஸ்திவாரம் போட்ட  வைகோ மகன் துரை வையாபுரி  அப்போது, திராவிடம் குறித்து கூறிய கருத்து பரபரப்பாக பேசப்பட்டது.   “எந்த தனிப்பட்ட மொழிக்கும், திராவிடம் எதிரானது கிடையாது. நுனிப்புல் மேய்ந்து, திராவிடம் பற்றி விளக்கம் அளிப்பவர்கள் மக்களை குழப்பி வருகின்றனர். திராவிடம் என்பது  மொழி ஆதிக்கத்திற்கு மட்டுமே எதிரானது
” என கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து படிப்படியாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு வந்தவர் தற்போது கட்சியில் முக்கிய பதவியையும் கைப்பற்றி உள்ளார்.

கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 20ந்தேதி) மதிமுக தலைமை அலுவலகத்தில் மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் உயர் நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில்  வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு கட்சியில் பதவி கொடுக்கப்பட்டது.  இது தொடர்பாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தப் பட்டதாகவும், வாக்களித்த 106 பேரில்  104 வாக்குகள் துரை வைகோவுக்கு கிடைத்துள்ளதால், அவர்  மதிமுக கழக செயலாளராக  நியமிக்கப் பட்டிருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார்.

வாரி அரசியல் குறித்து, குரல் கொடுத்து வந்த வைகோவும் தனது மகனுக்கு பதவி வழங்கியது மூலம் வாரிசு அரசியலை ஊக்குவித்துள்ளார் என பல நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

வைகோ மகன் கட்சிக்குள் வருவதை 3  மாவட்டச் செயலாளர்கள் எதிர்த்து, அன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் தவிர்த்து வந்தனர். இந்த நிலையில், 3 மாவட்டச் செயலாளர்களையும் மதிமுகவில் இருந்து இடைநீக்கம் செய்து வைகோ அறிவித்து உள்ளார். அதன்படி, சிவகங்கை செவந்தியப்பன், திருவள்ளூர் செங்குட்டுவன், விருதுநகர் சண்முகசுந்தரம் மீது வைகோ நடவடிக்கை எடுத்துள்ளார்.

வைகோ மகனுக்கு பதவியால் அதிருப்தி: மதிமுகவில் முதல் விக்கெட்!