சென்னை: வாச்சாத்தியில் 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அரசு அதிகாரிகளின்  17 பேருக்கு சிறை தண்டனையை சென்னை உயர்நீதி மன்றம்  உறுதி செய்துள்ளது. அவர்களின் மேல்முறையீடு மனுக்களை தள்ளுபடி செய்தது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்ட ஈடு வழக்கவும் உத்தரவிட்டுள்ளது.

வாச்சாத்தி மலைகிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்த வழக்குகளில்  சென்னை உயர் நீதிமன்றம், இன்று (செப்.29) விசாரணை நீதிமன்ற தீர்ப்பை உறுதிசெய்து தீர்ப்பளித்துள்ளது. அதாவது குற்றவாளிகளின் மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சந்தனமரக்கடத்தல் வீரப்பனுக்கு உதவியதாக, அப்போதைய அதிமுக அரசு, வாச்சாத்தி கிராமத்தில் நடவடிக்கை எடுத்தது. தமிழக வனத்துறையினர், இது குறித்து விசாரிப்பதற்காக காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்களின் உதவியுடன் 1992 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதியன்று ஒட்டுமொத்த கிராமத்தையும் சுற்றிவளைத்து சூறையாடினர். வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்த 133 பேரை கைதுசெய்தனர். அவர்களில் 90 பெண்கள், 28 குழந்தைகள், 15 ஆண்கள். இந்த சம்பவத்தின்போது 18 பெண்களை வனத்துறையினர், காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை செய்தனர். கிராம மக்கள் அனைவரும் அடித்து துன்புறுத்தப்பட்டதாகவும், அவர்களின் குடிசைகள் தகர்க்கப்பட்டு, வீட்டிலிருந்த பொருட்கள் நாசப்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தினார்கள்.

இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்ட நிலையில்,  சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கை விசாரித்து, 4 ஐ.எப்.எஸ். அதிகாரிகள் உள்பட வனத்துறையினர், காவல்துறை, வருவாய் துறையினர் என்று 269 பேர் மீது பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு நடந்த 19 ஆண்டுகளில் குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களில் 54 பேர் இறந்துவிட்டனர்.  குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் மீதமுள்ள 215 பேரும் குற்றவாளிகள் என்று தர்மபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிபதி குமரகுரு 2011-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி தீர்ப்பளித்தார்.

குற்றவாளிகளில், 126பேர் தமிழக அரசின் வனத்துறை அலுவலர்கள். 84 பேர் தமிழக காவல்துறையினர். மீதமுள்ள 5 பேர் தமிழக வருவாய்த்துறை ஊழியர்கள். அவர்களுக்கு ஓர் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி நேரடியாக வாச்சாத்தி கிராமம் சென்று ஆய்வு செய்து, மக்களை சந்தித்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

வாச்சாத்தி வழக்கில் குற்றவாளிகளுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதிசெய்தது உயர்நீதிமன்றம். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கும், பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என்றும்  உடனடியாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு வேலை அளிக்க இயலாத பட்சத்தில் உள்ள பெண்களுக்கு, சுயதொழில் தொடங்க அரசு உதவி செய்யவேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கும் 10 லட்ச ரூபாய் நிவாரணத்தில், ரூ.5 லட்சத்தைக் குற்றவாளிகளிடம் இருந்து வசூல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் யாரேனும் ஜாமீனில் இருந்தால், அவர்களை உடனடியாகக் கைது செய்ய, கிருஷ்ணகிரி நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் யாரேனும் இறந்திருந்தால், நிவாரணத் தொகையை அவரின் குடும்பத்துக்கு வழங்கவும்.b அப்போதைய எஸ்.பி, மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி பி.வேல்முருகன் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

வாச்சாத்தி மலைவாழ் மக்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு…