சென்னை: சென்னையின் மையப்பகுதியான  தி.நகர் பகுதியில் அமைந்துள்ள திருப்பதி தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஏழுமலையான் கோவிலை மேலும் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, அருகே உள்ள சுமார்  11 ஏக்கர் நிலங்கள் வாங்கப்பட்டு,  விரிவாக்கம் செய்ய உள்ளதாக  தேவஸ்தான ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி தெரிவித்து உள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான, திருமலை திருப்பதி தேவஸ்தான மண்டல ஆலோசனைக் குழுவின் (LAC)  தலைவராக தொழில் அதிபர் சேகர் ரெட்டி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு  தி.நகரில்  உள்ள திருப்பதி தேவஸ்தானம் கோயிலில், திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் கருணாகர ரெட்டி  பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் பழம்பெரும் நடிகை காஞ்சனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கிரவுண்ட் நிலம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு தானமாக வழங்கப்பட்டது. இந்த இடத்தில் தேவஸ்தானம் சார்பில் ரூ.10 கோடி செலவில் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டது.
நாட்டிலேயே முதன்முதலாக சென்னையில்தான் பத்மாவதி தாயாருக்கு தனி கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு 2023ம் ஆண்டு மார்ச் 18ந்தேதி சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இந்த நிலையில், கோவிலை மேலும் விரிவாக்கம் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து  செய்தியாளர்களிடம் பேசிய சேகர் ரெட்டி,  தி. நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின், வெங்கடேஸ்வரா கோவிலின் உத்தேச விரிவாக்கப் பணிகளில் கவனம் செலுத்துவதே தனது முதன்மையான பணி என தெரிவித்தவர்,  தற்போதுள்ள கோவில் வளாகம் தோராயமாக ஐந்தரை நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது.  கோவிலை ஒட்டிய நிலங்களை கையகப்படுத்தி, பதினொரு கிரவுண்ட் நிலத்துக்கு கோவில் வளாகத்தை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

இந்த கோவிலுக்கு, ரூ. 35 கோடி ரூபாய் மதிப்பில் நிலம் வாங்கப்பட்டு உள்ளது  என்றவர், இதுவரை 19 கோடி ரூபாய் நன்கொடை வந்துள்ளது. மேலும், நன்கொடை வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

திருமலா அறக்கட்டளை சார்பில் வரும் காலங்களில் ஏழை மக்களுக்கும், திருமண உதவி செய்ய உள்ளோம். இதற்காக, சென்னை ராயப்பேட்டையில் 2 ஏக்கரில் ஏழைகளுக்கு இலவச திருமண மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நடக்க இருக்கிறது, என்று சேகர் ரெட்டி கூறினார்.