சென்னை: வீடுகளுக்கே சென்று நேரடியாக தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தப்பட உள்ளதாக கூறிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாளை (சனிக்கிழமை) நடைபெற இருந்த  8வது தடுப்பூசி முகாம் 14ந்தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் இதுவரை 7முறை கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தி கோடிக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 8-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை (6ந்தேதி – சனிக்கிழமை) நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாளை நடைபெற இருந்த தடுப்பூசி மெகா முகாம் தள்ளி வைக்கப்படுவதாக கூறியதுடன், அது 14-ம் தேதிக்கு (சனிக்கிழமை) மாற்றப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், பொதுமக்களுக்கு வீடு தேடிச் சென்று தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுவரை தமிழ்நாட்டில் 71 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 31 சதவீதம் பேருக்கு 2வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை 100 சதவீதம் பேருக்கு போட தமிழகஅரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக,  வீடுகளுக்கே நேரடியாகச் சென்று தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி உள்ளது.

அதன்படி,  தமிழகத்தில் உள்ள 12525 ஊராட்சிகளில், ஒரு ஊராட்சிக்கு 7 கிளை கிராமங்கள் என்ற வகையில் 70 முதல் 80 கிராமங்களுக்கும் மருத்துவர், செவிலியர் என மருத்துவ குழு வாகனத்தில் நேரடியாக இல்லங்களுக்கு சென்று, தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திட்டம்செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் இதை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.