சென்னை: மடிப்பாக்கம் திமுக பிரமுகர் செல்வம் கொலை வழக்கில், மற்றொரு திமுக பிரமுகர் குட்டி என்கிற உமா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார். கட்சி பதவி மற்றும் காலி நிலத்தை அபகரிக்க நடைபெற்ற போட்டி காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை அடுத்த மடிப்பாக்கத்தில்  திமுகவின் 188வது வட்ட செயலாளராக உள்ள மடிப்பாக்கம் செல்வம் என்பவர் பிப்ரவரி 1ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனரர். இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி டோல்கேட்டில் கூலிப்படை கும்பலை சேர்ந்த 5  பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கூலிப்படை தலைவன் வியாசர்பாடியை சேர்ந்த முருகேசன்தான் இந்த கொலையை செய்ய சொன்னது தெரிய வந்தது.

இதையடுத்து, முருகேசனை தேடிவந்த காவல்துறையினர்,  அவர் அம்பத்தூர் பகுதியில் பதுங்கி இருந்தை தெரிந்து, சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர். பின்னர், அவரிடம் நடத்தப்பட்ட விசேஷ விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது. முருகேசன் அளித்த வாக்குமூலத்தில், திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

செல்வம் வசித்து வந்த பகுதியான மடிப்பாக்கம் குபேரன் நகர் 4 கிரவுண்டு இடம் காலியாக  இருந்தது. அந்த இடத்தை கைப்பற்றுவதில் அவருக்கும், மதுரை பகுதியில் உள்ள ரவுடி முத்து சரவணன், பாபு அண்ணன் ஆகியோருக்கு இடையே மோதல் நீடித்து வந்தது.  ஆனால் திமுக ஆட்சி என்பதால், செல்வம் தனது ஆதரவு கட்டுமான நிறுவனத்தின்மூலம்  அந்த காலி இடத்தில் பெயர் பலகை வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மோதல் அதிகரித்த நிலையில், இரு தரப்புக்கும் இடையே பண பேரம் நடைபெற்றுள்ளது.  இதைத்தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே மோதல் அதிகரித்தால், செல்வத்தை கொலை செய்ய எதிர்தரப்பு  திட்டம் தீட்டியது.

இதற்கிடையில், 188வது வார்டில் திமுக வட்ட துணைசெயலாளராக உள்ளவர் குட்டி என்கிற உமா மகேஸ்வரன்(43). மாவட்டச் செயலாளராக ஆசைப்பட்ட நிலையில், அவருக்கு இடையூறாக செல்வம் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், செல்வத்தை பழிவாங்க குட்டி காத்திருந்தார்.

இந்த சூழலில் நிலம் விவகாரம் சேர்ந்துகொள்ள, அவர்கள் அனைவரும் சேர்ந்து செல்வத்தை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினர். அதற்கான நேரம் வந்ததும் கூலிப்படைகொண்டு தங்களது திட்டத்தை நிறைவேற்றினர்.

இந்த விவரங்கள், சமீபத்தில் கைது செய்யப்பட்ட மற்றொரு முக்கிய குற்றவாளியான கமுதி முத்து சரவணனை கைது செய்தபிறகே தெரியவந்தது. அவரது  வாக்குமூலத்தில் அடிப்படையில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். செல்வத்துக்கு எதிராக ள் 4 பேரும் ஒன்று சேர்ந்து 40 லட்சம் ரூபாய் பணத்தை கூலிப்படை தலைவன் முருகேசன் மற்றும் முத்து சரவணிடம் கொடுத்து தீர்த்துக்கட்டுமாறு கூறியுள்ளனர்.

அதேநேரம் செல்வத்தின் நடவடிக்கைகளை எல்லாம் அவருடனே இருந்து பக்கவாக கூலிப்படைக்கு உமாமகேஸ்வரன் அப்டேட் கொடுத்துள்ளார். கொலை முடிந்த பிறகு எதுவுமே நடக்காததது போல உறவினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் குட்டி நின்றுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து வந்த மர்மம் முற்றிலுமாக விலகியுள்ளது.

கட்சி பதவி மற்றும் காலி நிலம் அபகரிப்பு என இரண்டு தரப்பில் இருந்த எதிரிகள் ஒன்று சேர்ந்து திமுக நிர்வாகியான மடிப்பாக்கம் செல்வத்தை திட்டம் தீட்டி கொன்றது அம்பலமாகியுள்ளது. இதுவரை 13 பேர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.