லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக மீண்டும் யோகி ஆதித்யநாத் 2வது முறையாக வரும் 25 ஆம் தேதி பதவியேற்கிறார். பிரதமர் மோடி தலைமையில் பதவி ஏற்புவிழா  25 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேசத்தில் பாஜக மீண்டும் அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக கூட்டணி 273 தொகுதிகளை கைப்பற்றி உள்ள நிலையில், பாஜக மட்டும்  255 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெருங்கட்சியாக உள்ளது. காங்கிரஸ் கட்சி அடியோடு ஓரங்கட்டப்பட்டுள்ள நிலையில்,  சமாஜ்வாதி கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்துள்ளது.

இந்த நிலையில், வரும் 25ந்தேதி உ.பி. மாநில அரசு பதவி ஏற்பு விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வராக யோகி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மற்ற அமைச்சர்கள் யார் யார் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

பதவி ஏற்பு விழா மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற உள்ளது. இந்த  விழாவில் பிரதமர் மோடி , மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்க உள்ளனர். மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முலாயம் சிங், மாயாவதி போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும்,  மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், உள்ளிட்டோருக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக பாஜக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன