மேகதாது – மத்திய அமைச்சரை சந்திக்க கர்நாடகா முடிவு

Must read

பெங்களூரூ:
மேகதாது அணை திட்டம் தொடர்பாக மீண்டும் மத்திய அமைச்சரை சந்திக்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது.

மேகதாது அணை திட்டம் தொடர்பாக மீண்டும் மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்த கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது. மேலும் இதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால், தமிழகம் இத்திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காவிரி நீரை நம்பியுள்ள டெல்டா மாவட்டங்கள் இந்த அணை கட்டினால் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் தமிழக அரசு தர்ப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அதேநேரம் குடிநீர் சார்ந்த திட்டம் என்பதால் அனுமதி கொடுக்க வேண்டும் என கர்நாடக அரசும் வலியுறுத்தி வருகிறது. மேலும் சமீபத்தில் மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தி, கர்நாடக மாநில காங்கிரஸ் மாபெரும் பேரணி நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைதொடர்ந்து, கர்நாடக சட்டபேரவையில் தாக்கல் செய்யபப்ட்ட மாநில பட்ஜெட்டில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தனது கண்டனங்களை தெரிவித்தது.

இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுடன் முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் கோவிந்த் கர்ஜோல், சட்டத்துறை அமைச்சர் மதுசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்.,கின் எச்.கே.பாட்டீல், டி.கே.சிவகுமார், எம்.பி., பாட்டீல், மதசார்பற்ற ஜனதா தளத்தின் பந்தெப்பா என அனைத்து கட்சி தலைவர்கள், காவிரி விவகாரத்தில் கர்நாடகா சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் மேகதாது அணையை விரைந்து செயல்படுத்த கோரி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து வலியுறுத்த கர்நாடகா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More articles

Latest article