லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர் ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என அவசத்தலான இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் உ.பி. மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வதேரா.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தால், மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்படும் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச சட்டமன்ற ஆட்சி காலம் 2022ம் ஆண்டு  மே மாதம் 14ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக அங்கு சட்டமன்ற தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். அங்கு 2022ம் ஆண்டு மார்ச், ஏப்ரலில் தேர்தல் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. இதையடுத்து அங்கு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன. ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதே வேளையில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள யோகி தலைமையிலான பாஜகவும் போராடி வருகிறது.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் முகாமிடடுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் 40 சதவீதம் பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறிய நிலையில், தற்போது மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை பிரியங்கா காந்தி வெளியிட்டு உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், காங்கிரஸ் கட்சி உத்தர பிரதேசத்தில் அடுத்த அரசு அமைக்கும் பட்சத்தில், மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன்கள் மற்றும் மின் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில்  சில பள்ளி மாணவிகளை சந்தித்தேன்… படிப்பதற்கும் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் ஸ்மார்ட் போன்கள் தேவைப்படுதுவதாக தெரிவித்தார். இதுதொடர்பாக தேர்தல் அறிக்கை குழுவின் ஒப்புதலுடன் உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

அதன்படி, பள்ளி படிப்பு முடித்த மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன்களும் மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மின் ஸ்கூட்டர்களும் வழங்கப்படும் என மகிழ்ச்சியுடன் அறிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு (2020)  தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில், சமாஜ்வாதி கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 114 இடங்களில் வெறும் 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

ஆனால், இந்த முறை அங்கு  காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி என 4 முனை போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.