புவனேஸ்வர்

டிசாவில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் கஞ்சா பயன்படுத்த தடை விதிக்க அம்மாநில அரசு முடிவு எடுத்துள்ளது.

கடந்த மாதம் 13 ஆம் தேதி ஒடிசா மாநிலம் ஆரடி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பாபா அகண்டல்மணி சிவன் கோவிலில் கஞ்சா பயன்பாட்டிற்குத் தடை விதிக்க வேண்டும் என அனந்த பலியா அறக்கட்டளையின் தலைவரான பலியா பாபா, ஒடிசா மாநில கலால் துறைக்குக் கடிதம் எழுதியிருந்தார். அவர், ‘சிவன் கோவிலுக்கு மாநிலம் முழுவதும் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இருப்பினும், சிவபெருமானின் பெயரில் கஞ்சாவை அதிகமாகப் பயன்படுத்துவது அந்த இடத்தின் மத உணர்வை மாசுபடுத்துகிறது. சிவன் கஞ்சா பயன்படுத்துவதில்லை. காலப்போக்கில், ஹிந்து மதம் மற்றும் அதன் கடவுள்கள் பற்றிய பல தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டன. கஞ்சாவிற்குப் பதிலாகப் பல நல்ல பொருட்களை இறைவனுக்குப் படைக்கலாம்’ என தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அவரது கடிதம் ஒடிசா கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுத் துறைக்கு அனுப்பப்பட்டது. சிவன் கோவில்களில் கஞ்சாவுக்குத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஒடிசா கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுத்துறை இயக்குநர், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.