நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மண்டபம் பேரூராட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் போட்டி!

Must read

ராமநாதபுரம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  மண்டபம் பேரூராட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் திமுக மற்றும் அதிமுக சார்பில் களமிறங்கி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலானது  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சேர்ந்த 12,838 வார்டுகளுக்கு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில்,   அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளன.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் திமுக மற்றும் அதிமுக சார்பில் களமிறங்கி உள்ளனர்.  மண்டபம் பேரூராட்சியில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் தலைவர் தங்க மரைக்காயர் (எ) ஷேக் அப்துல் காதர். இவர் ஏற்கனவே,  1986, 1996, 2001, 2006, 2011 என தொடர்ச்சியாக 5 முறை மண்டபம் பேரூராட்சித் தலைவராக இருந்துள்ளார். இவரது மறைவுக்கு பிறகு, தற்போதுதான் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு போட்டி கடுமையாக உள்ளது. பேரூராட்சியை கைப்பற்ற திமுகவும், அதிமுகவும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன.

மண்டபம் பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டுள்ளது. இதை கைப்பற்ற திமுக, அதிமுக சார்பில் தலைவர் பதவிக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே மோதி வருகின்றனர். திமுக சார்பில் தலைவர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் ராஜா, அக்கட்சியின் மண்டபம் நகரத் தலைவராக உள்ளார். இவரது மனைவி ஜெயந்தியின் சகோதரர் இளையராஜா, அதிமுக சார்பில் தலைவராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். இவர் அதிமுக மாவட்ட மருத்துவர் அணி செயலாளராக உள்ளார்.

அதுபோல, திமுக சார்பில் ஜெயந்தி 3-வது வார்டிலும், அவரது மற்றொரு சகோதரர் சம்பத் ராஜா 2-வது வார்டிலும் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் ஜெயந்தியின் சகோதரி சைலஜா 12-வது வார்டில் போட்டியிடுகிறார். மாவட்டத்தில் வேறு எந்த பேரூராட்சியிலும் இல்லாத வகையில் மண்டபம் பேரூ ராட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் திமுக, அதிமுக சார்பில் போட்டியிடுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article